

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெய லலிதாவை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர். குமாரசாமி, கனத்த மௌனத் துடன் நேற்று ஓய்வு பெற்றார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கினார்.
இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்த மேல்முறை யீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் திமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி நால்வரையும் விடுதலை செய்தார். 19 ஆண்டு களாக நடைபெற்ற வழக்கை 41 நாட் களில் விசாரித்து, 919 பக்கங்களில் குமாரசாமி வழங்கிய தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தீர்ப்பில் பல்வேறு குறைபாடு கள் இருப்பதாக பல்வேறு சட்ட வல்லுநர்கள் விமர்சித்தபோதும், கடந்த 3 மாதங்களாக குமாரசாமி மௌனமாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் 63 வயதான சி.ஆர்.குமாரசாமி நேற்று தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார். கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) எஸ்.கே.முகர்ஜி முன்னிலையில் பிரியா விடை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதி எஸ்.கே. முகர்ஜி, “கடந்த ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து சகோதரர் குமாரசாமியை எனக்குத்தெரியும். எப்போதும் சிரித்த முகம் கொண்ட இவர், அதிகம் பேசாமல் அமைதியாகவே இருப்பார். ஒரு பொறுப்புள்ள நீதிபதியாக மனசாட்சியுடன் பணியாற்றி ஓய்வு பெறுகிறார்” என்றார்.
நீதிபதி குமாரசாமி பேசும்போது, தனது பெற்றோரில் ஆரம்பித்து சகோதரர்கள், மனைவி, மகள் உள்ளிட்டோருக்கும், தன்னுடன் பணியாற்றிய நீதிபதிகளில் தொடங்கி,வழக்கறிஞர்கள், கார் ஓட்டுநர் வரை அனைவருக்கும் நன்றி கூறினார்.
இதையடுத்து கர்நாடக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரியா விடை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நீதிபதி குமாரசாமி பேசும்போது, ''உலகில் எந்த நீதிபதியையும் விட உயர்ந்த நீதிபதி மனசாட்சி தான். நீதிபதியாக இருந்த நாட்கள் மிகவும் கடுமையானதாக இருந்தா லும் மனசாட்சிப்படி பணியாற்றி னேன். நீதிபதிகள் பற்றாக்குறை யால் நிறைய வழக்குகள் தேங்கி யுள்ளன. இவற்றை விரைவாக முடிக்க நீதிபதிகளுக்கு வழக் கறிஞர்கள் உதவ வேண்டும். அனைவரும் இணைந்து பணி யாற்றினால், நீதி பரிபாலனம் இன்னும் சிறப்பாக நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் மைசூரு தலைப்பாகைகள் எனக்கு அணி விக்கப்பட்டுள்ளது. என் வாழ் நாளில் மைசூரு தலைப்பாகை அணிவேன் என்று ஒருநாளும் நினைத்தது இல்லை. இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றிய எனது சகோதரர் அடிக்கடி மைசூரு தலைப்பாகை வாங்குவார். வெளிநாடுகளில் பணியாற்றும்போது, முக்கிய நாட்களில் இந்த தலைப்பாகையை அணிந்துக் கொள்வதாக கூறுவார். இப்போது நான் அணிந்து கொண்டபோது, வித்தியாசமாக உணர்கிறேன்''என்றார்.
இந்த நிகழ்ச்சியில், குமாரசாமி தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளிப்பார் என வழக்கறிஞர்கள் எதிர்ப்பார்த்தனர். அவர் தனது வழக்கமான மௌனத்துடன் விடைபெற்றார். இறுதியாக நீதிபதி குமாரசாமியை நாம் அணுகி, ஜெயலலிதா வழக்கு குறித்த விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பினோம். அதற்கு, “பதில் அளிக்க விருப்பம் இல்லை” என மறுத்துவிட்டார்.