

தந்தையின் நினைவு தினத்தில் முன்பின் தெரியாத 9 கைதிகள் சிறையில் இருந்து விடுதலை பெறுவதற்காக சமூக ஆர்வலர் ஒருவர் உதவியுள்ளார்.
அந்த 9 கைதிகளும் இதுவரை அந்த சமூக ஆர்வலரைப் பார்த்தது இல்லை. அவரைப் பற்றி அறிந்தது கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 9 கைதிகளும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு சிறைத் தண்டனை முடிந்த பின்னும், தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் கூடுதல் நாட்கள் சிறையில் இருந்தனர். அவர்களுக்குத் தன்னுடைய சொந்தப் பணத்தில் அபராதம் செலுத்தி அவர்களை சமூக ஆர்வலர் விடுவித்துள்ளார்.
தனது தந்தையின் நினைவு தினத்தை முன்னிட்டு ரூ. 61ஆயிரத்து 333 செலவு செய்து சமூக ஆர்வலர் பிரவேந்திர குமார் யாதவ் என்பவர் 9 கைதிகளை விடுவித்துள்ளார். ஆனால், அந்த 9 கைதிகளுக்கும் தங்களை விடுவித்தது யார் என்றும், அவர் எவ்வாறு இருப்பார் என்பது குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து சமூக ஆர்வலர் பிரவேந்திர குமார் யாதவ் நிருபர்களிடம் கூறுகையில், "என்னுடைய தந்தையின் 6-வது நினைவு தினத்தை முன்னிட்டு 9 கைதிகளுக்கு விடுதலை பெற்றுத் தர முடிவு செய்தேன். அதுதான் எனது தந்தைக்குச் செய்யும் அஞ்சலியாக இருக்கும் என்று நினைத்து அபராதம் செலுத்தி விடுவித்தேன். ஆனால், நான் யார் என்பது அந்தக் கைதிகளுக்குச் சொல்லப்படவில்லை" எனத் தெரிவித்தார்.
ஆக்ரா சிறையின் கண்காணிப்பாளர் சசிகாந்த் மிஸ்ரா கூறுகையில், "அபராதத் தொகையை மற்றவர்கள் செலுத்தி இதுவரை 313 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் சிறை நிர்வாகம், ரூ.21 லட்சம் வசூலித்துள்ளது. சமூக ஆர்வலர்கள் மட்டுமல்லாமல், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், தனிநபர்கள் இதுபோல் அபராதத்தைச் செலுத்தி சிறைத் தண்டனை முடியும் தருவாயில் இருக்கும் கைதிகளை விடுவித்துள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.