Last Updated : 02 Jan, 2020 11:07 AM

 

Published : 02 Jan 2020 11:07 AM
Last Updated : 02 Jan 2020 11:07 AM

நீதிமன்றத்தில் குற்றவாளி சுடப்பட்ட சம்பவம் எதிரொலி: உ.பி. அரசால் சிறப்பு காவல்படை புதிதாக அமைகிறது 

பிஜ்னோரில் நீதிபதி முன்பான துப்பாக்கிச் சூடு நிகழ்வில் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. இதையடுத்து அம்மாநில அரசால் புதிதாக சட்டம் இயற்றி ஒரு சிறப்பு காவல்படை உருவாக்கப்பட உள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படை, உ.பி.யின் செஷன்ஸ், மாவட்ட மற்றும் உயர் நீதிமன்றங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்கள், தாஜ்மகால், அயோத்தியின் ராமர், வாரணாசியின் காசி விஸ்வநாதர் மற்றும் மதுராவின் கிருஷ்ணர் ஆகிய முக்கியக் கோயில்களிலும் உ.பி.யின் புதிய சிறப்பு காவல்படை பாதுகாப்புப் பணியாற்றும்.

இதற்காக, உ.பி. அரசு புதிதாக ஒரு சட்டம் இயற்றி வரும் உ.பி. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றுகிறது. இத்துடன் சேர்த்து உ.பி.யில் சட்டம் ஒழுங்கு காக்கும் இரண்டு காவல் படைகள் அமைகின்றன.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் உ.பி. மாநில உயர் அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ''பிஜ்னோர் நீதிமன்ற சம்பவத்தின் எதிரொலியாக இந்தப் படை அமைகிறது. இதை அரசு மற்ற பல முக்கியப் பாதுகாப்புப் பணியிலும் பயன்படுத்தும். இதற்கான சட்ட மசோதா வரைவு தயாராகி அமைச்சரவை ஒப்புதலுக்குக் காத்திருக்கிறது. பிறகு சட்டப்பேரவையிலும் ஒப்புதல் பெற்று புதிய படை உருவாகும்'' எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மே 28-ல் சுட்டுக் கொல்லப்பட்ட பகுஜன் சமாஜின் ஹாஜி அஹேசான், அவரது உறவினர் ஷாதாப்பின் கொலை வழக்கு விசாரணை டிசம்பர் 17-ல் உ.பி.யின் பிஜ்னோர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதற்காக திஹார் சிறையில் இருந்து கொலைக் குற்றவாளிகளான ஷானாவாஸ் அன்சாரி, ஜப்பார் டெல்லி போலீஸாரால் அழைத்து வரப்பட்டனர். அப்போது துப்பாக்கிகளுடன் கொலையான அஹேசானின் மகன் சாஹில் தலைமையில் ஒரு கும்பல் திடீர் என உள்ளே புகுந்தது.

அங்கு ஆஜாரான இரு கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான ஷானாவாஸ் அன்சாரியை சுட்டுக்கொன்ற அக்கும்பல் தப்பியது. இரு மாநில போலீஸார் முன்னிலையில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அங்கிருந்த நீதிபதி உயிர் தப்பி ஓட வேண்டியதாயிற்று.

இதையடுத்து அக்கும்பல் மற்றும் போலீஸாருக்கு இடையே துப்பாக்கிக் குண்டுகளால் மோதல் ஏற்பட்டும் கும்பலில் ஒருவரை கூடப் பிடிக்க முடியவில்லை. இதுபோன்ற சம்பவம் நீதிபதி முன்னிலையில் முதன்முறையாக நடைபெற்றது.

எனினும், பல்வேறு நீதிமன்றங்களின் வளாகத்தில் இதுபோல் இரு கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு பலிகள் நடந்துள்ளன. இந்தச் சம்பவம் மீது உ.பி.யின் அலகாபாத் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இதில் உ.பி. மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகளான சுதிர் அகர்வால் மற்றும் சுனித் குமார், இனி உ.பி. அரசு தலையிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை எனில், பாதுகாப்புப் பணிக்காக மத்திய பாதுகாப்புப் படையை அழைக்க வேண்டி இருக்கும் எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

இதன் வழக்கு இன்று ஜனவரி 2 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இதில் உ.பி. அரசிற்கான நோட்டீஸின் பதிலில் இந்தப் புதிய படை குறித்த தகவலை வெளியிடும் வாய்ப்புகள் உள்ளன.

தற்போது, தாஜ்மகால் மற்றும் புனிதத் தலங்களில் மத்திய, மாநில போலீஸாரின் பாதுகாப்புகள் உள்ளன. இதில், முக்கிய இடம் மற்றும் முதல் வளையத்தில் மத்தியப் பாதுகாப்புப் படை உள்ளது.

எனவே, உ.பி.யில் புதிதாக உருவாகும் சிறப்புக் காவல்படை, மத்திய பாதுகாப்புப் படைகளைப் போல் உருவாக உள்ளது. தற்போதைக்கு உ.பி. போலீஸ் மற்றும் அதன் காவல் படையான பிஏசியில் நன்கு திறமை வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

பிறகு அவர்களுடன் புதிதாகத் தேர்ந்தெடுத்து பயிற்சி பெற்றவர்களும் உ.பி. புதிய காவல்படையில் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படையினை மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார்.

ஒடிசா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் மத்திய பாதுகாப்புப் படையைப் போல் ஒரு காவல் படை உருவாகி செயல்பட்டு வருகிறது. இதன் பணிகள் அம்மாநிலங்களின் தேவைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன.

இவற்றில் சில மாநிலங்கள் தனியார்களின் பாதுகாப்பிற்காகவும் ஒரு குறிப்பிட்ட கட்டணத்துடன் அக்காவல்படையை அனுப்பி வைக்கிறது. இதேவகையில், உ.பி.யின் புதிய காவல்படையும் உருவாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x