Published : 02 Jan 2020 09:04 AM
Last Updated : 02 Jan 2020 09:04 AM

காஷ்மீரில் நிலம் வாங்க முடியவில்லை என வேதனைப்பட்டார் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி: அமெரிக்கவாழ் இந்தியர் வெளியிட்ட கடிதத்தில் தகவல்

ஆர்.ஷபிமுன்னா

ஜம்மு-காஷ்மீரில் தம்மால் நிலம் வாங்க முடியவில்லை என முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேதனைப்பட்டுள்ளார். இதை குறிப்பிட்டு அவர் தான் அமெரிக்கவாழ் இந்தியருக்கு எழுதிய கடிதத்தில் இந்த தகவல் பதிவாகி உள்ளது.

அமெரிக்காவின் வெளிநாடுவாழ் காஷ்மீரிகள் சங்கத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் நிர்மலா மித்ரா. இவர், நியூயார்க்மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் மருத்துவப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். டிசம்பர் 18, 1980-ம் ஆண்டில் பிரதமர் இந்திராவிடம் உறவினர் ஒருவருக்கு உதவி கேட்டு நிர்மலா கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கு இந்திரா ஜனவரி 8, 1981-ல் எழுதிய பதில் கடிதத்தின் நகல் தற்போது சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. நிர்மலாவின் நண்பர் எனக் கூறும் நியூஜெர்ஸிவாசியான ராகேஷ் கவுல் வெளியிட்ட கடிதத்தில் காஷ்மீரின் ரத்து செய்யப்பட்ட அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு சிறப்பு அந்தஸ்து பற்றிய முக்கிய நிலையும் வெளியாகி உள்ளது.

டைப்ரைட்டர் இயந்திரம் உதவியால் அச்சான இக்கடிதத்தில் இந்திரா குறிப்பிடும்போது, ‘‘காஷ்மீரில் பிறந்த நீங்களோ, எனது காஷ்மீர்வாழ் மூதாதையர் வழிவந்த நானோ காஷ்மீரில் ஒரு சிறு நிலம் அல்லது வீடு வாங்க முடியாதது வருத்தமே. உங்கள் உறவினரை பற்றி விசாரிக்கிறேன். ஆனால், அங்கு வாழும் பண்டிட்டுகளும், லடாக்கின் புத்த சமயத்தினரும் மிகவும் மோசமான நிலையில் பாரபட்சத்திற்கும் உள்ளாகின்றனர்’’ எனக் கூறியுள்ளார்.

இந்த நிலைமைக்கு அப்போது ஜம்மு-காஷ்மீரில் அமலாகி இருந்த அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு சிறப்பு அந்தஸ்து காரணமாக இருந்துள்ளது. இந்த பிரச்சினை தனது கைகளில் இல்லை எனக் கூறும் மறைந்த இந்திரா, அதில் உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் இந்திய மற்றும் சர்வதேசத்தின் அன்றைய பத்திரிகைகள், தான் ஒரு அதிகார சக்தியாக சித்தரித்ததை காரணமாகத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் குறித்து ’இந்து தமிழ்’ நாளேடு, டெல்லியின் தேசிய காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்டபோது அக்கடிதத்தின் உண்மைத்தன்மை மீது கேள்வி எழுப்பி கருத்துக்கூற மறுத்தனர்

எனினும், தான் வெளியிட்ட பழைய கடிதம் 200 சதவீதம் உண்மையானது என உறுதி அளிக்கும் ராகேஷ் கவுல், அதன் தொடர்புடைய மற்ற கடிதங்களும் தம்மிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இக்கடிதங்களின் பின்னணியில் உள்ள சர்ச்சைக்குரிய சதிகளுக்கான உண்மையை வெளிப்படுத்தக் கவுல் தயாராக இருப்பதாகவும் சவால் விடுகிறார்.

இதுகுறித்து ராகேஷ் கவுல் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், ‘‘அரசியலைமைப்பு சட்டம் 370 மற்றும் 35 ஏ மீதானதம் நிலைபாட்டை குறிப்பிட்டு எனது நண்பர் டாக்டர்.மித்ராவிற்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எழுதிய வரலாற்று சிறப்புமிக்க கடிதத்தை இங்கு வெளியிட்டுள்ளேன். இந்திராவை போல் அல்லாமல் உரிய நடவடிக்கை எடுப்பதில் பிரதமர் நரேந்திர மோடியும், அவரது உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தயங்காமைக்கு நன்றி’’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x