ரயில் கட்டண உயர்வுக்குப் பதிலாக அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கும் புத்தாண்டுப் பரிசைத் தந்திருக்கலாம் : சித்தராமையா

சித்தராமையா.
சித்தராமையா.
Updated on
1 min read

இந்திய ரயில்வேயின் கட்டண உயர்வு அறிவிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, ரயில் கட்டணங்களை அதிகரித்ததற்குப் பதிலாக அரசியலமைப்பு மதிப்புகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் புத்தாண்டுப் பரிசு அளித்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

புறநகர் ரயில்களைத் தவிர்த்து ரயில் டிக்கெட் கட்டணம் இன்றுமுதல் (2020, ஜனவரி 1-ம் தேதி) உயர்த்தப்படுவதாக ரயில்வே அமைச்சகம் நேற்று மாலை அறிவித்தது. அதன்படி ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு செவ்வாய் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, புறநகர் ரயில்கள், புறநகர் ரயில்கள் சீசன் டிக்கெட் ஆகியவற்றின் கட்டணம் ஏதும் உயர்த்தப்படவில்லை. கட்டண உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு இந்திய ரயில்வே துறையை நவீனமயமாக்க உதவும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்னர் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா ட்விட்டர் பதிவில் இன்று கூறியுள்ளதாவது:

''ரயில் கட்டண உயர்வு என்பது நரேந்திர மோடி அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் புத்தாண்டுப் பரிசு. ரயில்வே போக்குவரத்து நாட்டின் முதுகெலும்பாக இருப்பதால் இந்தக் கட்டண உயர்வு நடவடிக்கை வளர்ச்சி வாய்ப்புகளைப் பாதிக்கும். அதற்கு பதிலாக, எங்கள் அரசியலமைப்பின் மதிப்புகளுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் அரசாங்கம் எங்களுக்குப் பரிசளித்திருக்க வேண்டும்''.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பின் அம்சங்களுக்குப் புறம்பாக மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவந்ததாக எழுந்து வரும் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கி சித்தராமையா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in