Last Updated : 01 Jan, 2020 04:18 PM

 

Published : 01 Jan 2020 04:18 PM
Last Updated : 01 Jan 2020 04:18 PM

ரூ. 615 கோடி செலவில் சந்திரயான்-3 திட்டத்துக்கு அனுமதி: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் அதன் தலைவர் சிவன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சந்திரயான்-2 திட்டமிட்டபடி லேண்டர் வேகம் குறையாமல், அதே வேகமாகச் சென்று நிலவில் மோதியது. இதனால் அதனை வெற்றிகரமாக தரையிறக்க முடி யாமல் போனது. இருப்பினும் ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அடுத்த 7 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இயங்கி, நிலவு பற்றிய தகவல்களை அனுப்பி கொண்டிருக்கும். சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்ட போது உணர்ச்சிவசப்பட்டு விட்டதால் பிரதமர் நரேந்திர மோடியை கட்டிப்பிடித்து கண் கலங்கினேன்.

சந்திராயன்-3 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சந்திராயன் 2-ஐ போலவே இதுவும் நிலவின் தெற்கு பகுதியை ஆராய்வதையே இலக்காக கொண்டுள்ளது. சந்திரயான்-3 திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சந்திரயான்-3 திட்டத்துக்கு மொத்தமாக ரூ.600 கோடிக்கு மேல் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது சந்திரயான்-2-ஐ ஒப்பிடும்போது குறைவான தொகை தான். ஏனென்றால் சந்திரயான்-2 திட்டத்துக்கு ரூ.965 கோடி செலவு செய்யப்பட்டது. சந்திரயான்-3 திட்டத்தை பொறுத்தவரை லேண்டருக்கு ரூ.250 கோடியும், திட்டத்தின் மற்ற செயல்பாட்டுக்கு ரூ.365 கோடியும் செலவாகும். இதன்படி பார்த்தால் மொத்தமாக ரூ.615 கோடி செலவில் சந்திராயன்-3 தயாராகும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டைப் போலவே இஸ்ரோ வுக்கு இந்த ஆண்டும் 50-க்கும் மேற் பட்ட திட்டங்கள் உள்ளன. இதனால் சந்திராயன்-3 க்கான பணிகள் எந்த விதத்திலும் பாதிக்காது. அடுத்ததாக மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்ப 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி 3-ம் வாரத்தில் இந்த விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி ரஷ்யாவில் தொடங்குகிறது.

ஆர்பிட்டர் இல்லாமல் சாஃப்ட் லேண்டிங் முயற்சி 2020 இறுதி யிலோ 2021 தொடக்கத்திலோ திட்ட மிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி அருகே குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்துவரு கிறது. 2020-ம் ஆண்டு சந்திரயான்-3 மற்றும் ககன்யான் திட்டங்களுக்கான ஆண்டாக அமையும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x