

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை வங்கிகள் பயன்படுத்தலாம் என அனுமதி வழங்கி விஜய் மல்லையா வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 2016-ல் நாட்டை விட்டு வெளியேறிய விஜய் மல்லையா, பின்னர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். பண மோசடி தடுப்புச் சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி மல்லையாவைத் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவித்தது.
விஜய் மல்லையாவின் சொத்துகள் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. கடன் வழங்குநர்கள் மல்லையாவின் சொத்துகளைக் கலைத்து 2013 ஆம் ஆண்டிலிருலுந்து ரூ.6,203.35 கோடிக்கான 11.5 சதவீத வட்டி செலுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு ஒன்றினால் பறிமுதல் செய்யப்பட்ட மல்லையாவின் சொத்துகளைக் கலைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பண மோசடி தடுப்புச் சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியது.
இந்நிலையில் இவ்வழக்கு மீது மும்பை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அதன்படி விஜய் மல்லையாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை வங்கிகள் பயன்படுத்தலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட தரப்பினர், வரும் 18-ம் தேதிக்குள் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.