

பாதுகாப்புத் துறையில் ராணுவ விவகாரத்துறை, தலைமைத் தளபதி பதவி உருவாக்கம் ஆகியவை மிக முக்கியமான சீர்திருத்தங்கள் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
பாதுகாப்புத் துறையில் சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, 5 வகையான பிரிவுகள் அல்லது துறைகள் உள்ளன. பாதுகாப்புத் துறை, ராணுவ விவகாரங்கள் துறை, பாதுகாப்பு உற்பத்தித் துறை, பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறை, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் நலத்துறை என 5 துறைகள் செயல்படும்.
இதில் புதிதாக ராணுவ விவகாரத்துறை உருவாக்கப்பட்டு, தலைமைத் தளபதி பதவியும் நிறுவப்பட்டது. இந்தப் பதவிக்குத் தரைப்படைத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டு இன்று அவர் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார்.
முப்படைகளையும் ஒருங்கிணைத்தல், ஒருகுடையின் கீழ் கொண்டு வருதல், முக்கியக் காலகட்டங்களில் ஆலோசனை செய்தல், கருத்தொற்றுமையை ஏற்படுத்துதல், பாதுகாப்புத் துறை அமைச்சகம், முப்படைத் தளபதிகளுக்குப் பாலமாக இருத்தல் போன்ற பல்வேறு பணிகள் தலைமைத் தளபதிக்கு உள்ளன.
தலைமைத் தளபதியாக பிபின் ராவத் பதவி ஏற்றுக்கொண்டதற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்ட கருத்து:
"நாட்டின் புதிய தலைமைத் தளபதியாகப் பதவி ஏற்றுள்ள ஜெனரல் பிபின் ராவத்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். பெரும் வைராக்கியத்துடன் தேசத்துக்குச் சேவை செய்த மிகச் சிறந்த அதிகாரி.
பாதுகாப்புத் துறையில் ராணுவ விவகாரத்துறை, ராணுவ வல்லுனத்துவத்தோடு கூடிய தலைமைத் தளபதி பதவி உருவாக்கம் என்பது மிக முக்கியமான முழுமையான சீர்திருத்தம். மாறி வரும் நவீன போர் சவால்களை எதிர்கொள்ள நம் தேசத்துக்கு உதவும்.
தேசத்தின் ராணுவத்தை நவீனமயமாக்குதல் எனும் மிகப்பெரிய பொறுப்பு தலைமைத் தளபதி பதவிக்கு இருக்கிறது. 130 கோடி இந்திய மக்களின் நம்பிக்கைகளை, ஆசைகளைப் பிரதிபலிக்கும் பதவி இது.
முதல் ராணுவத் தலைமைத் தளபதி பொறுப்பேற்றுள்ளார். நம் தேசத்துக்காகத் தனது இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன். கார்கில் போரில் துணிச்சலாகப் போரிட்ட நமது வீரர்களின் வீரத்தை இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்.
பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின் ராணுவத்தின் சீரமைப்பு தொடங்கியுள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க மேம்பாட்டுக்கு முன்னெடுக்கும்".
இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.