Last Updated : 01 Jan, 2020 11:57 AM

 

Published : 01 Jan 2020 11:57 AM
Last Updated : 01 Jan 2020 11:57 AM

'அரசியலை விட்டு ஒதுங்கி இருப்போம்': நாட்டின் முதல் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் பொறுப்பேற்பு

புதிய தலைமைத் தளபதியாக பொறுப்பேற்ற பிபின் ராவத் டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த காட்சி : படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

நாட்டின் முதல் தலைமைத் தளபதியாக முன்னாள் தரைப்படைத் தளபதியான ஜெனரல் பிபின் ராவத் இன்று முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார்.

ராணுவம் அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கும், அரசின் வழிகாட்டுதல் படி செயல்படுவோம் என்று தலைமைத் தளபதி பிபின் ராவத் உறுதியளித்தார்.

நம் நாட்டில் இப்போது தரைப்படை விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்குத் தனித்தனியாகத் தளபதிகள் உள்ளனர். ஆனால், போர்க்காலங்கள், அவசர நேரத்தில் இந்த மூன்று தளபதிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த, வழிநடத்தத் தலைமைத் தளபதி என்று இல்லை. இதற்கான நடைமுறைச் சிக்கல்கள் எழுந்தன. இது கார்கில் போரின்போது உணரப்பட்டது.

இதுகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வளர்ந்த நாடுகளில் இருப்பது போல முப்படைக்கும் தளபதி (Chief of Defence Staff CDS) பதவியை உருவாக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் கடந்த 24-ம் தேதி நடைபெற்றது. இதில் புதிதாக முப்படை தலைமைத் தளபதி பதவியை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தப் புதிய தலைமைத் தளபதியாக ஓய்வு பெற்ற ராணுவத் தளபதி பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.

தரைப்படை தளபதியாக பணியாற்றி நேற்று ஓய்வு பெற்ற ஜெனரல் பிபின் ராவத்துக்கு நேற்று தரைப்படைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, கடற்படை தளபதி கரம்பிர் சிங், விமானப் படைத் தளபதி ராகேஷ் குமார் சிங் பதூரியா ஆகியோர் சேர்ந்து மரியாதை அளித்து விடை கொடுத்தனர்.

இந்நிலையில், புதிய தலைமைத் தளபதியாக பிபின் ராவத் இன்று முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்கும் முன் டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து ஜெனரல் பிபின் ராவத் மரியாதை செலுத்தினார். அதன்பின், நடந்த வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

டெல்லியில் தலைமைத் தளபதி பிபின் ராவத் நிருபர்களிடம் பேசுகையில், "தரைப்படை, விமானப் படை, கடற்படை ஆகிய 3 பிரிவுகளும் குழுவாக ஒற்றுமையாக இயங்கும். தலைமைத் தளபதிக்குக் கொடுக்கப்பட்டு இருக்கும் பணியின்படி, மூன்று படைகளுக்கும் இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தி, வளங்களைச் சிறப்பாக மேலாண்மை செய்து பயன்படுத்துவோம்.

மூன்று படைப் பிரிவுகளுக்கு இடையே கூட்டுறவு, ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கப் பணியாற்றுவேன். எங்களுடைய நம்பிக்கை, குழுவாகப் பணியாற்றும் திறன் ஆகியவற்றில் பெரிய இலக்குகளை அடைவோம். எங்களின் செயல்பாட்டின் வெற்றி அனைத்தும் குழுவாகச் செயல்படுவதில் இருக்கிறது.

ராணுவத்தில் இருக்கும் முப்படைப் பிரிவுகளும் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கவேண்டும், அரசின் வழிகாட்டுதல்கள் படி செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

சர்ச்சை

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்து அரசியல் ரீதியான கருத்துகளை ஓய்வு பெறும் முன் பிபின் ராவத் தெரிவித்தது பெரும் சர்ச்சையானது. தலைமைத் தளபதியாக யாரை நியமிக்கலாம் என்று மத்திய அரசு ஆலோசித்து வந்த நிலையில், பிபின் ராவத் மத்திய அரசுக்கு ஆதரவாகவும், போராட்டக்காரர்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி விமர்சனத்துக்குள்ளானது. காங்கிரஸ் கட்சி, ஓவைசி எம்.பி. உள்ளிட்டோர் பிபின் ராவத்தை விமர்சித்திருந்தனர். இந்நிலையில் அவரே இப்போது, அரசியலை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என்று பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x