

குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக் கோரி கேரள சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நேற்று கூறியதாவது:
குடியுரிமை குறித்த சட்டங்களைப் பிறப்பிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. அதை தவிர, கேரள சட்டப்பேரவை உட்பட வேறெந்த மாநில சட்டப்பேரவைக்கும் அந்த அதிகாரம் கிடையாது. அதிலும் குடியுரிமை சட்டத்துக்கும் இந்தியக் குடிமக்களுக்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது. இது இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்குதல் அல்லது இந்தியர்களின் குடியுரிமையை பறித்தல் ஆகியன குறித்ததல்ல.
முன்னாள் இந்தியப் பிரதமர்கள் இந்திரா காந்தியும் ராஜிவ் காந்தியும் உகாண்டா மற்றும் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த சிறுபான்மையினருக்கு ஏற்கெனவே குடியுரிமை வழங்கி இருக்கின்ற னர். அன்று காங்கிரஸ் கட்சியினருக்கு ஏற்புடையதாக இருந்த அதே சட்டத் திருத்தம் இன்று பிரதமர் நரேந்திர மோடியாலும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவாலும் கொண்டு வரப்படும் போது மட்டும் பிரச்சினைக் குரியதாக எப்படி மாறியது?
ஏனென்றால் இவர்கள் இரட்டை நிலைப்பாடு கொண்ட வேஷதாரிகள். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து மத ரீதியான ஒடுக்குமுறை காரணமாக வெளியேறி இந்தியாவில் குடியேறிய சிறு பான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் மிகச் சிறப்பான சட்டம் இது. ஆனால், இதுதொடர்பாக பலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு ரவிசங் கர் பிரசாத் கூறினார்.- பிடிஐ