

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மசூதி கட்டுவதற்கு நிலம் ஒதுக்கு வதற்காக 5 இடங்களை உ.பி.அரசு தேர்வு செய்துள்ளதாகவும் அதை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என நவம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதேநேரம், மசூதி கட்டுவதற்காக சன்னி வக்பு வாரியத்துக்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், ஜாமியத் உலமா-ஐ-இந்த் அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் வேறு இடத்தில் நிலம் வேண்டாம் என தெரிவித்துவிட்டன. அதேநேரம் இந்த வழக்கின் முக்கிய மனுதாரரான சன்னி வக்பு வாரியம் நிலத்தை ஏற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
இதனிடையே, அயோத்தி தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்நிலையில், மசூதி கட்டுவதற்காக சன்னி வக்பு வாரியத்துக்கு நிலம் ஒதுக்குவதற்காக உத்தரபிரதேச அரசு 5 இடங்களை தேர்வு செய்துள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது. இதற்குமத்திய உள் துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது.
அயோத்தி-பைஸாபாத் சாலை, அயோத்தி-பாஸ்தி சாலை, அயோத்தி-சுல்தான்பூர் சாலை மற்றும் அயோத்தி-கோரக்பூர் சாலை ஆகிய பகுதிகளில் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதவிர, பஞ்ச்கோசி பாரிக்ரமா சாலைக்கு வெளியே அமைந்துள்ள ஒரு நெடுஞ்சாலையில் ஒரு இடமும் அடையாளம் காணப் பட்டுள்ளது.
மீண்டும் மோதல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, ராமர் கோயில் அமைய உள்ள பகுதியிலிருந்து சற்று தொலைவில் (15 கி.மீ.சுற்றளவு) மசூதி கட்ட இடம் ஒதுக்க வேண்டும் என சாதுக்கள் கோரிக்கை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.