Last Updated : 31 Dec, 2019 08:11 PM

 

Published : 31 Dec 2019 08:11 PM
Last Updated : 31 Dec 2019 08:11 PM

மாநிலங்களின் எதிர்ப்பைச் சமாளிக்க மத்திய அரசு முடிவு: ஆன்லைனில் குடியுரிமை வழங்க திட்டம்- புதிய ஆணையம் அமைக்க பரிசீலனை; உள்துறை அமைச்சக அதிகாரிகள் தீவிரம்

மாநிலங்களின் எதிர்ப்பைச் சமாளிக்க ஆன்லைனில் குடியுரிமைவழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 1955-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கடந்த 2016-ம் ஆண்டிலேயே நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டியது.

ஆனால், மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாதது, கடந்த அரசின் பதவிக்காலம்முடிவு உள்ளிட்ட காரணங்களால் அப்போது அந்த மசோதா காலாவதியானது. இந்நிலையில், இந்த மசோதாவை மக்களவை, மாநிலங்களவையில் இம்முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டுவந்து நிறைவேற்றியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தின்படி கடந்த 2014-ம்ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாதஇந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பார்ஸிகள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதப்பட மாட்டார்கள்.

இந்தியாவில் அவர்கள் குடியேறிய 5 ஆண்டுகளில் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அது 11 ஆண்டுகளாக இருந்தது. மேலும், இந்தச் சட்டப்படி போதிய ஆவணம் இல்லை என்றாலும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள அசாம், மிசோரம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட பழங்குடியினப் பகுதிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சட்டத்துக்கு இரண்டு தனித்துவ காரணங்களால் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் வாழும்பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவதால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், முஸ்லிம்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதால் நாட்டின் மற்ற பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்தச் சட்டத்துக்கு சில மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலஅரசுகள் இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளன. இந்தச் சட்டத்தை நீக்கவேண்டும் என்று கேரள சட்டப் பேரவையில் மாநில அரசு தீர்மானமே நிறைவேற்றியுள்ளது.

இதுகுறித்து கேரள முதல்வர்பினராயி விஜயன் கூறும்போது, “இந்தச் சட்டமானது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகஅமைந்துள்ளது. இதற்கு இங்குஇடம் இல்லை. இதை நாங்கள்ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” என்றார்.

இதைப் போலவே பஞ்சாப், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களும் இந்தச் சட்டமானது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, “இந்தச் சட்டத்தை மாநிலங்களவை, மக்களவையில் வேண்டுமானால் பாஜக தலைமையிலான அரசு நிறைவேற்றலாம். ஏனென்றால் அங்கு உங்களுக்கு போதிய உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் சட்டம் என்ற பெயரில் நாட்டைப் பிரிக்க யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது? இதை நடத்த நாங்கள் விடமாட்டோம். இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். அவரே தலைமை தாங்கி மேற்கு வங்கத்தில் பேரணிகளையும் நடத்தி வருகிறார்.

இதனிடையே, மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதன் எதிரொலியாக, குடியுரிமை வழங்கும் பணிகள் அனைத்தையும் ஆன்லைனில் செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதுகுறித்து மத்திய உள்துறைஅமைச்சகத்தின் மூத்த அதிகாரிஒருவர் கூறும்போது, “தற்போதுஇந்த சட்டத்தின்படி குடியுரிமையைப் பெற மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கவேண்டும். அவர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்த்து குடியுரிமை வழங்க பரிந்துரை செய்வார். ஆனால் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் குடியுரிமையைப் பெற விண்ணப்பிக்கும் முறையை மாவட்ட ஆட்சியருக்குப் பதிலாக ஆன்லைனில் வழங்க புதிதாக ஒரு ஆணையத்தை ஏற்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இந்தப் பணிகள் முழுமையாக ஆன்லைனில் இருக்கும்பட்சத்தில் இதற்கு மாநில அரசுகள் உள்ளிட்ட எந்த நிலையிலிருந்தும் இடையூறுகள் வர வாய்ப்பில்லை.

அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள மத்திய அரசு பட்டியலில் இந்த குடியுரிமை சட்டம் இருப்பதால் குடியுரிமை பெற ஒருவர் விண்ணப்பிக்கும்போது அதை நிராகரிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை. பாதுகாப்பு, வெளியுறவு, ரயில்வே, குடியுரிமை உள்ளிட்ட 97 வகையான பிரிவுகள் மத்திய அரசு பட்டியலில் உள்ளன. இவற்றை நிராகரிக்கும் உரிமையோ அதிகாரமோ மாநில அரசுகளுக்கு இல்லை.

எனவே குடியுரிமை வழங்குவதற்கான நடைமுறை அனைத்தையும் ஆன்லைனில் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும்” என்றார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x