Last Updated : 31 Dec, 2019 05:39 PM

 

Published : 31 Dec 2019 05:39 PM
Last Updated : 31 Dec 2019 05:39 PM

அடுத்த 5 ஆண்டுகளில் உள் கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.102 லட்சம் கோடி: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

தேசத்தின் அடிப்படை வசதி, உள் கட்டமைப்புத் திட்டங்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.102 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிட இருக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.

தேசத்தின் பொருளாதாரம் கடந்த 2 காலாண்டுகளாக வளர்ச்சிக் குறைவைச் சந்தித்து வருகிறது. முக்கியத் துறைகளில் உற்பத்தி சரிவு, ஆட்டோமொபைல் துறையில் விற்பனை தேக்கம், ரியல் எஸ்டேட் துறையில் பின்னடைவு என பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாகவும், அதன்பின் 2-வது காலாண்டில் 4.5 சதவீதமாகவும் வீழ்ச்சி அடைந்தது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சி குறைந்தது.

இதற்கிடையே பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் வரிச்சலுகை அறிவித்தார், வீடுகள் கட்டப்பட்டு முடிக்காமல் இருப்பதை முடிக்கும் வகையில் ரூ.25 ஆயிரம் கோடிக்குத் திட்டங்கள், வங்கிகளுக்கு மறுமுதலீடு போன்றவற்றை அறிவித்து பொருளாதார சக்கரம் வேகமாகச் சுழல்வதற்கு முயற்சி எடுத்தார்

இந்நிலையில் அடுத்த சில நாட்களில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3-வது காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சிக்கான புள்ளிவிவரங்கள் வெளியாக உள்ளன. இந்த சூழலில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு மேற்கொள்ள உள்ள கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.

டெல்லியில் நிருபர்களுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையின்போது மத்திய அரசு அடிப்படை வசதி, உள் கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.100 லட்சம் கோடியைச் செலவிட இருக்கிறது என்று அறிவித்தார். அதன்படி மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் தேசத்தின் அடிப்படை வசதிக் கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.102 லட்சம் கோடி செலவிட இருக்கிறது.

70 வகையான நிறுவனங்களுடன், தலைவர்களுடன் கடந்த 4 மாதங்களில் குறுகிய அளவில் ஆலோசனைகள் நடத்திய பின் ரூ.102 லட்சம் கோடிக்கான கட்டமைப்புத் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுதவிர கூடுதலாக ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களும் இணைக்கப்பட உள்ளன.

கடந்த 6 ஆண்டுகளில் மத்திய அரசும், மாநில அரசுகளும் சேர்ந்து ரூ.51 லட்சம் கோடிக்கான திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளன. இதில் 39 சதவீத திட்டங்கள் மத்திய அரசு மூலமும், 22 சதவீத திட்டங்கள் தனியார் துறை மூலமும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மின்சாரம், ரயில்வே, நகர நீர்ப்பாசனவசதி, போக்குவரத்து, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் அடுத்த 5 ஆண்டுகளில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

ரூ.25 லட்சம் கோடி மதிப்பிலான மின் திட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. சாலை மேம்பாட்டில் ரூ.20 லட்சம் கோடி திட்டங்களும், ரயில்வேயில் ரூ.14 லட்சம் திட்டங்களும் செயல்பாட்டில் இருக்கின்றன.

இந்த ரூ.102 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் இந்தியா, 2025-ம் ஆண்டில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உயரும் என்ற நம்பிக்கை இருக்கிறது''.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x