Last Updated : 31 Dec, 2019 03:03 PM

 

Published : 31 Dec 2019 03:03 PM
Last Updated : 31 Dec 2019 03:03 PM

'பெரோஸ் பிரியங்கா' என்று பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும்: பிரியங்கா காந்தியைச் சாடிய சாத்வி நிரஞ்சன் ஜோதி

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது பெயரை பெரோஸ் பிரியங்கா என்று மாற்றிக்கொள்ள வேண்டும். காவி நிறத்தின் புனிதம் அவருக்குத் தெரியவில்லை என்று மத்திய ஊரக மேம்பாட்டுத்துறையின் இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி சாடியுள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். ஏராளமான பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டது.

இந்நிலையில் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தவர்களே அதற்கான தொகை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் சொத்து பறிமுதல் செய்யப்படும். அவர்களுக்கு எதிராகப் பதிலுக்குப் பதில் நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்திருந்தார்.

காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி : கோப்புப்படம்

இதற்கிடையே லக்னோவில் 4 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று புறப்படும் முன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "காவி நிறம் என்பது இந்து மதத்தையும், ஆன்மிகத்தையும் குறிக்கிறது. ஆனால், காவி உடை அணிந்து கொண்டு முதல்வர் ஆதித்யநாத் வன்முறைக்கும், பழிவாங்கலுக்கும் துணை போகக்கூடாது. தேசத்தின் ஆன்மாவில் பழிவாங்கலுக்கும், வன்முறைக்கும் இடமில்லை. இந்து மதத்தின் நிறம் காவி வண்ணம். முதல்வர் யோகி இந்து மதத்தைப் பின்பற்ற வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலடி அளித்த முதல்வர் ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில், "சன்நியாசிகளின் வாழ்வில், பொதுப்பணியில் யாரேனும் தலையிட்டால் தண்டிக்கப்படுவார்கள். வாரிசு அரசியலிலும், அனுதாப அரசியலிலும் இருப்பவர்களுக்குச் சேவையைப் புரிந்து கொள்ளுதல் கடினமாகத்தான் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறையின் இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி டெல்லியில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தபோது, பிரியங்கா காந்தியைக் கடுமையாகச் சாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:

காந்தி என்ற பெயரைப் போலியாக வைத்திருப்பவர்களால் உண்மையில் காவி நிறத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாது. பிரியங்கா காந்தி தனது பெயரில் உள்ள காந்தி என்ற பெயரை நீக்கிவிட்டு, பெரோஸ் பிரியங்கா என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கிரிமினல்களுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதைக் கண்டு பிரியங்கா காந்தியால் பொறுக்க முடியவில்லை. போராட்டக்காரர்களுக்குப் பின்னால் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பது குறித்து பிரியங்கா காந்தி வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

காவி நிறத்தைப் பற்றி பிரியங்கா காந்தி எளிதாகப் பேசக் கூடாது. அதுபற்றி அதிகமாக அவர் படிக்க வேண்டும். போலியாகப் பெயர் வைத்திருப்பவர்கள்தான், அனைவரின் பெயரையும் அவ்வாறு பார்க்கத் தோன்றும். அதுபோலத்தான் யோகியின் பெயரையும் பிரியங்கா பார்த்துள்ளார்.

அப்படியென்றால் அப்பாவிகள் மீது கல்லெறிந்தவர்கள், அப்பாவிகளைத் தாக்கியவர்களை போலீஸார் தண்டிக்க வேண்டுமா அல்லது இல்லையா என்பதைப் பிரியங்கா காந்தியே கூறட்டும். பிரியங்கா காந்திதான் போராட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு அவர்களை சாலைக்கு வரச் சொல்வதாக நான் பார்க்கிறேன்’’.

இவ்வாறு சாத்வி நிரஞ்சன் ஜோதி குற்றம் சாட்டினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x