Last Updated : 31 Dec, 2019 01:09 PM

 

Published : 31 Dec 2019 01:09 PM
Last Updated : 31 Dec 2019 01:09 PM

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி கேரளச் சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் கொண்டுவந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆளும் கேரள மாநிலத்திலும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கட்சி வேறுபாடின்றி பாஜகவைத் தவிர்த்து, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும், ஆளும் இடதுசாரிக் கூட்டணியைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.

இதற்கிடையே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றவும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை நீட்டிக்கவும் ஒரு நாள் சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டம் கூட்ட கேரள அரசு முடிவு செய்தது. இதன்படி, கேரள சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது.

சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானத்தைக் கொண்டுவந்து தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது

''கேரள மதச்சார்பின்மைக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. கிரேக்கர்கள், ரோமானியர்கள், அரேபியர்கள், டச்சுக்காரர்கள் என பலரும் இந்த மண்ணிக்கு வந்து செழுமை காட்டியுள்ளார்கள். இந்த மண்ணின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்று சட்டப்பேரவை விரும்புகிறது. நம்முடைய பாரம்பரியம் முழுமையானது. அதை உயிரோடு வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

இந்தல் குடியுரிமைத் திருத்த மசோதா மதரீதியான பாகுபாட்டை உருவாக்கி, குடியுரிமையை வழங்குகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையின் உயர்ந்த மதிப்புகளுக்கும், கொள்கைகளுக்கும் விரோதமாகச் சட்டம் இருக்கிறது. இந்தச் சட்டம் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆதலால், இந்தச் சட்டத்தை மத்திய அரசு கைவிட்டு, அரசியலமைப்பின் மதச்சார்பின்மையைக் காக்க வேண்டும். கேரளாவில் இதுவரை எந்தவிதமான தடுப்பு முகாம்களும் இல்லை. இனிமேலும் தடுப்பு முகாம்கள் வராது''.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

அதன்பின் நடந்த வாக்கெடுப்பில் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அவையில் இருந்து பாஜக எம்எல்ஏ ஓ.ராஜகோபால் இந்த மசோதா நிறைவேறியது சட்டவிரோதமானது என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x