Published : 31 Dec 2019 10:24 AM
Last Updated : 31 Dec 2019 10:24 AM

ஐநா நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் கேரளா முதலிடம், பிஹார் கடைசி

ஐநா நீடித்த வளர்ச்சி இலக்குகள் திட்டத்தில் (UN Sustainable Development Goals) கேரளா முதலிடம் வகிக்கிறது. நிதி ஆயோக்கின் இதே நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் பிஹார் கடைசி இடத்தில் உள்ளது.

தென் மாநிலங்களுடன் மேலிடத்தில் இமாச்சலம், சிக்கிம் ஆகிய மாநிலங்களும் உள்ளன. இந்த மாநிலங்கல் நூற்றுக்கு 65 மதிப்பெண்கள் பெற்றுள்ளன.

பட்டினியை ஒழிப்பது மற்றும் பாலினச் சமத்துவம் என்ற புலங்களில் பெரும்பாலான மாநிலங்களுமே பின் நிலையில்தான் உள்ளன. ஆனால் நிதி ஆயோக் மொத்தமாக இந்தியாவுக்கு 60 புள்ளிகள் வழங்கியிருக்கிறது. தூய எரிவாயு, சுகாதாரம், அமைதி, நீதி, வலுவான நிறுவனங்கள் ஆகிய அடிப்படையில் நிதி ஆயோக் இந்தியாவுக்கு 60 புள்ளிகள் வழங்கியுள்ளது.

பொதுவாக ஐநா நீடித்த வளர்ச்சி இலக்குகள் (எஸ்டிஜி) என்பது 2015-ல் ஐநா பொதுச்சபையினால் 17 பரந்துபட்ட உலக இலக்குகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த இலக்குகள் 2030-க்குள் எட்டப்பட வேண்டும். உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு கொண்ட இந்தியா இந்த இலக்குகளை எட்டுவது மிக முக்கியமானது என்று ஐநா பார்க்கிறது.

இதற்காக 232 குறியீடுகளை ஐநா உருவாக்கியுள்ளது. நிதி ஆயோக் இதே அளவுகோல்களை இந்திய மாநிலங்களுக்கு அமைத்து 100 குறியீடுகளை உருவாக்கியிருந்தது.

இதில் கேரளா கடந்த வருடம் போலவே தன் முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது. உ.பி., சிக்கிம், ஒடிசா ஆகியவை வளர்ச்சி அறிகுறிகள் காட்டியுள்ளன.

வறுமை ஒழிப்பு மற்றும் ஊட்டச்சத்துக் குறைவின்மை ஆகிய குறியீடுகளில் கோவா 75 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க, கேரளா, மிசோரம், நாகாலாந்து, அருணாச்சல், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் 65க்கும் கூடுதலாக மதிப்பெண்கள் பெற்றுள்ளன. 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கல் 50க்கும் குறைவாகவே இதில் மதிப்பெண் பெற்றுள்ளன, பிஹார், ஜார்கண்ட், ம.பி, சத்திஸ்கர் ஆகிய மாநிலங்கள் இதே குறியீட்டில் 30-க்கும் கீழ்தான் மதிப்பெண் பெற்றுள்ளன. அதாவது இந்த மத்திய இந்திய மாநிலங்களில் பட்டினியும் ஊட்டச்சத்துக் குறைபாடும் தலைவிரித்து ஆடுகின்றன.

அதே போல் பாலின சமத்துவத்தில் பெரும்பாலான மாநிலங்கள் பின் தங்கியே உள்ளன. ஆனால் இதிலும் கேரளா எப்படியோ 50 புள்ளிகளுக்கும் அதிகமாகப் பெற்றுள்ளது. இந்தக் குறியீட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை, பெண் பாலினத்துக்கு எதிரான குற்றங்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடு, பெண்கள் அரசியல் பொருளாதார அதிகாரம் வழங்கல் ஆகியவை அடங்கும், எனவே பெண்கள் முன்னேற்றத்திலும் கேரளா 50க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x