

நாட்டில் முஸ்லிம்களின் எண்ணி க்கை அதிகரிப்பதற்கு மதவாத அரசியலே காரணம் என்று சிவ சேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் பிரச்சார இதழான 'சாம்னா'வில் கூறப்பட்டுள்ளதாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் குறித்து இந்து இயக்கங்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. இன்றும் நமது நாடு இந்து நாடாகவே இருக்கிறது. முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்க மதவாத அரசியல்தான் காரணம். நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான கடுமையான விதிகள் இல்லாததும் இன்னொரு காரணம்.
முஸ்லிம் இளைஞர்களுக்கு நல்ல கல்வியும், வேலை வாய்ப்பும் கிடைக்க வேண்டு மென்றால், முதலில் வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும்.
பாகிஸ்தானின் இன்றைய நிலைமையை முஸ்லிம்கள் பார்த்து வருகிறார்கள். அவர்கள் இந்துக்களுடன் சேர்ந்து நாட்டின் முன்னேற்றத்துக்குப் பாடுபட வேண்டும். நாட்டின் கலாச்சாரமாக இந்து மதத்தை பார்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.