Last Updated : 30 Dec, 2019 03:32 PM

 

Published : 30 Dec 2019 03:32 PM
Last Updated : 30 Dec 2019 03:32 PM

பாதுகாப்புக் குறைபாடுகள் இல்லை; விதிமுறைகளைத்தான் பிரியங்கா காந்தி மீறிவிட்டார்: சிஆர்பிஎப் விளக்கம்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி லக்னோவில் கடந்த இரு நாட்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நடந்த சம்பவங்களில் எந்தவிதமான பாதுகாப்புக் குறைபாடுகளும் இல்லை. அவர்தான் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி நடந்து கொண்டார் என்று சிஆர்பிஎப் விளக்கம் அளித்துள்ளது.

பிரியங்கா காந்தியின் பாதுகாப்பு விஷயத்தில் சிஆர்பிஎப் அதிகாரிகள் மெத்தனமாக நடந்து கொண்டார்கள் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டிய நிலையில், அதற்கு சிஆர்பிஎப் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி எஸ்ஆர் தாராபூரி போராட்டம் நடத்தி, கைது செய்யப்பட்டார். லக்னோவில் தாராபூரியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சனிக்கிழமை சென்றார்.

ஆனால், லக்னோவில் உள்ள லோஹியா பாத் எனுமிடத்தில் பிரியங்கா காந்தி கார் வந்தபோது போலீஸார் மடக்கி அனுமதி மறுத்தனர். ஆனாலும் பிரியங்கா காந்தி தயங்காமல் காங்கிரஸ் செயலாளர் தீரஜ் குர்ஜாருடன் இருசக்கர வாகனத்தில் தாராபூரி இல்லத்துக்குச் சென்றார்.

இதனால் செய்வதறியாது திகைத்த லக்னோ போலீஸார், ஜீப்பில் பிரியங்கா காந்தியைப் பின்தொடர்ந்து விரட்டிச் சென்று பாலிடெக்னிஸ் சதுக்கம் எனுமிடத்தில் மடக்கிப் பிடித்து, அங்கு செல்ல அனுமதி மறுத்தனர்.

ஆனால், பிரியங்கா காந்தி தனது தொண்டர்களுடன் 2.5 கி.மீ. தொலைவு நடந்தே சென்றார். அப்போது பிரியங்கா காந்தியைத் தடுக்க முயன்ற பெண் போலீஸார் அவரின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

சிஆர்பிஎப் அதிகாரிகள் பிரியங்கா காந்தியின் பாதுகாப்பு விஷயத்தில் அக்கறை குறைவாக நடந்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

லக்னோவில் கடந்த இரு நாட்களாக பிரியங்கா காந்தி தங்கியிருந்தபோது, அவரிடம் லக்னோ போலீஸார் முரட்டுத்தனமாக நடந்து, அவரைத் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக பிரியங்கா காந்தியின் அலுவலகம் சார்பில் கடந்த 28-ம் தேதி லக்னோ போலீஸ் சர்க்கிள் அதிகாரி மீது விஐபி பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் ஐஜி பி.கே.சிங்கிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையி்ல் பிரியங்கா காந்தியின் பாதுகாப்பை ஆய்வு செய்ததில் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லை, விதிமுறைகளைத்தான் பிரியங்கா மீறிவிட்டார் என்று சிஆர்பிஎப் விளக்கம் அளித்துள்ளது.

அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரியங்கா காந்தியின் பாதுகாப்பில் அனைத்துவிதமான பாதுகாப்பு விதிமுறைகளையும் சிஆர்பிஎப் பிரிவினர் கடைப்பிடித்துள்ளனர். முன்கூட்டியே பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை சிஆர்பிஎப் அதிகாரிகள் கடைப்பிடித்துள்ளார்கள். ஆதலால் பிரியங்கா காந்தியின் பாதுகாப்பில் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லை.

பிரியங்கா காந்தி காங்கிரஸ் அலுவலகத்துக்குச் செல்லும் ஒரு நிகழ்ச்சி மட்டும்தான் தனக்கு இருக்கிறது என்று சிஆர்பிஎப் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அது தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகள், கட்டுப்பாடுகளை சிஆர்பிஎப் அதிகாரிகள் முறையாகக் கடைப்பிடித்தனர்.

ஆனால், பிரியங்கா காந்தியின் தனிப்பட்ட உதவியாளர் எந்தவிதமான நிகழ்ச்சி நிரலையும் தெளிவாகக் குறிப்பிடாமல் திடீரென உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகியைச் சந்திக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாதுகாப்பு அளிக்கக் கோரி உ.பி. போலீஸ் சர்க்கிள் அதிகாரியிடம் காலை 8 மணிக்குத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, பிரியங்கா காந்தி தனது கட்சியைச் சேர்ந்த ஒருவருடன் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி தாராபூரியின் குடும்பத்தினரைச் சந்திக்க இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றார். அங்குதான் பிரியங்கா காந்தி பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சிஆர்பிஎப் அதிகாரிகளின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் பிரியங்கா காந்தி கவச உடை ஏதுமின்றியும், தலையில் ஹெல்மெட் அணியாமலும், பாதுகாப்பு அதிகாரிகள் துணையில்லாமலும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

பிரியங்கா காந்தியின் இந்தத் திட்டமும் திட்டமிட்டு நடக்கவில்லை. திட்டமிடப்படாத நிகழ்ச்சியால், எங்களின் பாதுகாப்பு முன்னேற்பாடுகளைத் திட்டமிட முடியவில்லை.

சிஆர்பிஎப் அதிகாரிகளைப் பொறுத்தவரைப் பிரியங்கா காந்திக்கு விதிமுறைகள் படி பாதுகாப்பு வழங்கப்பட்டது. பாதுகாப்புக் குறைபாடுகள் ஏதுமில்லை''.

இவ்வாறு சிஆர்பிஎப் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x