Last Updated : 30 Dec, 2019 02:31 PM

 

Published : 30 Dec 2019 02:31 PM
Last Updated : 30 Dec 2019 02:31 PM

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக கலவரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் பேராசிரியர் பணியை ஏற்க மறுப்பு 

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 15-ல் ஓர் ஆய்வு மாணவரின் கை, கண்ணீர் புகை குண்டால் படுகாயம் அடைந்தது. இதற்காக, கருணை அடிப்படையில் அதன் நிர்வாகம் அளித்த தற்காலிக உதவிப் பேராசிரியர் பணியை அவர் ஏற்க மறுத்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின்போது ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் டெல்லி போலீஸார் அத்துமீறி நுழைந்தனர். மாணவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் நடத்திய தாக்குதல் கண்டனத்துக்கு உள்ளானது.

போலீஸாரைக் கண்டித்து அதே தினம் இரவு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களும் தம் வளாகத்தினுள் போராட்டம் நடத்தினர். இதை அடக்க வேண்டி உ.பி. போலீஸாரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் நிர்வாகத்தின் அனுமதியுடன் உள்ளே நுழைந்தனர்.

அப்போது சுமார் 60 மாணவர்களும் 12 போலீஸாரும் காயம் அடைந்தனர். இவர்களில், முகமது தாரீக் எனும் வேதியியல் ஆய்வு மாணவரின் கையில் கண்ணீர் புகை குண்டு பட்டு வெடித்தது.

இதனால், ஒரு விரலை இழந்ததுடன் தாரீக் அப்பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதில் அவரது நிலைமை மிகவும் மோசமடைந்ததால் தாரீக், தீவிர சிகிச்சைக்காக டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதே பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவரான தாரீக், உதவிப் பேராசிரியருக்கான நெட் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர். இத்துடன் ஜே.ஆர்.எப் தேர்விலும் தேர்ச்சி பெற்று முனைவர் பட்டத்திற்கான ஆய்வைத் தொடர்ந்தார்.

இதனால், தாரீக்கிற்கு கருணை அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு உதவிப் பேராசிரியர் பணிக்கான உத்தரவை நிர்வாகம் அளித்திருந்தது. அதேசமயம், கண்ணீர் புகை குண்டைப் பிடித்து போலீஸார் மீது திருப்பி வீச முயன்றார் எனவும், தாரீக்கிற்கு அப்பணி அளிக்கக் கூடாது என்றும் இந்துத்துவா மாணவர்கள் அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், தமக்கு அளிக்கப்பட்ட தற்காலிகப் பணி உத்தரவை ஏற்க தாரீக் மறுத்துள்ளார். இதற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை. இதனிடையே, உ.பி. போலீஸாரால் 26 மாணவர்கள் அதே தினம் கைதாகி ஜாமீனில் விடப்பட்டுள்ளனர். மேலும் 1200 பெயர் தெரியாத மாணவர்கள் மீதும் வழக்குப் பதிவாகி விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுவன்றி மத்திய பாதுகாப்புப் படையின் சார்பில் பெயர் தெரியாத 10,000 மாணவர்கள் மீது சில தினங்களுக்கு முன் வழக்குப் பதிவாகி உள்ளது. கலவரம் காரணமாக விடுமுறை விடப்பட்ட பல்கலைக்கழகம் மீண்டும் ஜனவரி 5 ஆம் தேதி பல்வேறு கட்டங்களாக தொடங்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x