Last Updated : 29 Dec, 2019 04:13 PM

 

Published : 29 Dec 2019 04:13 PM
Last Updated : 29 Dec 2019 04:13 PM

குடியுரிமை திருத்தச் சட்டம் தலித் மேம்பாட்டுக்கானது: ஜே.பி.நட்டா பேச்சு

குடியுரிமை திருத்தச் சட்டம் தலித் மேம்பாட்டுக்கானது என்று புதுடெல்லியில் நடைபெற்றுவரும் ஒருநாள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று தெரிவித்தார். மேலும், இந்தியா, பாகிஸ்தானை பிரிவினை செய்தது காங்கிரஸ் கட்சிதான், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதும் காங்கிரஸ்தான் என்று அவர் குற்றச்சாட்டினார்.

எதிர் கட்சிகள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துவருவதால் மத்திய அரசுக்கு எதிரான கருத்துப்போரில் வெற்றிபெறுவதற்காக ஆளும் பாஜக நாடுமுழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் சாதகமான அம்சங்கள் குறித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பாஜக குடியுரிமை திருத்தச் சட்டம் தலித் உரிமைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிப்பதற்கான பிரத்யோக இணையதளம் ஒன்றை பாஜக நேற்று தொடங்கியது.

இதனை நாடு முழுவதும் உள்ள மக்களை சென்றடைவதற்காக சரோஜ் பாண்டே, ராகுல் சின்ஹா, அனில் ஜெயின் போன்ற ஆறு மண்டல ஒருங்கிணைப்பாளர்களை நியமித்துள்ளது. இதற்கான தொடக்க விழாக்கள் நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற உள்ளது.

ராஜமுந்திரியில் பாஜகவின் மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல். நரசிம்மராவ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கிறார். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாவில் கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் அருண் சிங் தொடங்கிவைக்கிறார். திங்களன்று, முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மகாராஷ்டிராவின் நாசிக்கிலும், மத்திய மந்திரி நித்யநாத் ராய் வங்காளத்தின் கூச் பெஹாரிலும் தொடங்கிவைக்கிறார்கள். அதே நாளில், கஜேந்திர சேகாவத் தெலுங்கானாவின் கரீம் நகரில் தொடங்கிவைக்கிறார்.

இதற்கான விளக்க மாநாடு ஒன்று புதுடெல்லியில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. டால்கடோரா மைதானத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்துகொண்டு நட்டா கூறியதாவது:

''சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக லியாக்கத் - நேரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அதனை மதிக்கவில்லை. இந்தச் சட்டத்தை கொண்டுவருவதற்கான காரணம் பாகிஸ்தானியர்களின் மதத் துன்புறுத்தல்தான்.

இந்தியா பாகிஸ்தானை பிரித்தது காங்கிரஸ் கட்சி. அந்த பிரிவினை மதத்தின் அடிப்படையில் செய்யப்பட்டது என்பதை நாம் மறந்துவிட முடியாது. பிரிவினைக்குப் பிறகு நாம் நமது நாட்டை மதச்சார்பற்றவர்களாக அறிவித்திருந்தோம், ஆனால் பாகிஸ்தான் தங்களை இஸ்லாமிய தேசமாக அறிவித்திருந்தது.

நாட்டை பிரிவினை செய்த காங்கிரஸ் இன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கிறது. சிஏஏவின் பயனாளிகளில் 70 சதவீதம் பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த சட்டம் தலித் மேம்பாட்டுக்கானது என்பதை ஏனோ மறந்துவிட்டு எதிர்க்கட்சிகள் பேசிவருகிறார்கள். இதில் தலித் தலைவர்கள்கூட விதிவிலக்கில்லை. இந்த சட்டத்திற்கு எதிரான வாதங்களை தலித் தலைவர்களும்கூட முன்வைக்கிறீர்கள். நீங்கள் பேசுவதற்கு முன் குறைந்தபட்சம் சிந்தியுங்கள்.''

இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x