

அரசியல், வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாடு தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
சீனாவுக்கான இந்தியத் தூதர் அசோக் கே.காந்தாவை சந்தித்த சீனப் பிரதமரின் ஆலோ சனைக்குழு உறுப்பினர் யாங் ஜீச்சி, “இந்தியாவுடனான உற வுக்கு சீனா மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தியாவில் புதிதாகப் பதவியேற்றுள்ள அரசுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்” என்றார். அதற்கு, “இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்தியாவும் விரும்புகிறது” என்று அசோக் கே.காந்தா கூறினார்.
1954-ம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சீனப் பிரதமர் சூ என் லாய் ஆகியோரால் பஞ்ச சீலக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வின் 60-வது ஆண்டு கொண்டாட்டம், சீனாவில் வரும் ஜூன் 28-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சீனா, இந்தியா, மியான்மர் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வில் இந்தியா சார்பில் நரேந்திர மோடி பங்கேற்க வேண்டும் என சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
சீனப் பிரதமர் லீ கெஹியாங் கூறும்போது, “இந்தியப் பிரதம ராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவை இயற்கையான கூட்டாளியாக சீனா கருதுகிறது. நரேந்திர மோடி தலைமையிலான அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்” என்றார்.
அடுத்த சில நாள்களில் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு லீ கெஹியாங் பேசுவார் என்று சீன அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.