Last Updated : 29 Dec, 2019 01:56 PM

 

Published : 29 Dec 2019 01:56 PM
Last Updated : 29 Dec 2019 01:56 PM

இளைஞர்கள் அராஜகம், சாதியை வெறுக்கிறார்கள்; உள்நாட்டு பொருட்களை வாங்குங்கள்: மன் கி பாத்தில் பிரதமர் மோடி பேச்சு

இன்றுள்ள இளைஞர்கள் அராஜகம், சாதிப்பாகுபாடு, தகுதியற்றவர்களுக்கு வாய்ப்பளித்தல், சார்புத்தன்மை ஆகியவற்றை விரும்பவில்லை என்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்

கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்திய வானொலியில் “மனதின் குரல்” என்ற நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி தொடங்கி மக்களிடம் பேசினார். அப்பேதுமுதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அவர் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை, மக்கள் குறித்தும், சாதித்த இந்தியர்கள், குறித்தும் நாட்டில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் குறித்தும் பேசி வருகிறார்.

2019-ம் ஆண்டின் கடைசி மாதத்தில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது

இன்றுள்ள இளைஞர்கள் அராஜகம், குழப்பம் ஆகியவற்றை அறவே வெறுக்கிறார்கள். சாதி பார்த்தல், தகுதியற்றவர்களுக்கு உறவு, நட்பு அடிப்படையில் சலுகை செய்தல், சார்புத்தன்மை பாலினப்பாகுபாடு, நிர்வாகமின்மை ஆகியவற்றை இளைஞர்கள் விரும்பவில்லை.

என்னைப் பொறுத்தவரை இளைஞர்கள் இந்த அமைப்பு முறையை வரவேற்கிறார்கள், அதுமட்டுமல்லாமல், அதைப் பின்பற்றவும் விரும்புகிறார்கள். இந்த அமைப்பு முறை சரியாகச் செயல்படாவிட்டால் அவர்கள் அதிருப்தி அடைந்து, துணிச்சலாகக் கேள்வியும் கேட்கிறார்கள். இந்த பண்பை நான் நல்ல ஒழுக்கமானதாகக் கருதுகிறேன்

நவீன, புதிய இந்தியாவை கட்டமைப்பதிலும், மேம்பாட்டிலும் வரும் 10 ஆண்டுகள் இந்தியாவில் உள்ள இளைஞர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என நம்புகிறேன். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. சுவாமி விவேகானந்தர் கூறியதுபோன்று சக்தி நிரம்பிய, உற்சாகம் நிறைந்த, ஆற்றல் வாய்ந்த இளைஞர்கள் மாற்றத்தை விளைவிப்பார்கள் என்று தெரிவித்தார்

நாட்டில் எங்கெல்லாம் குழப்பங்கள், நிகழ்கிறதோ அந்த சம்பவங்களை இளைஞர்கள் துணிச்சலாக வீடியோவாகப் பதிவு செய்து, தவறு செய்தவர்களை உணரவைக்கிறார்கள். நம்முடைய புதிய தலைமுறை இளைஞர்கள் புதிய வடிவமானவர்கள், புதிய முறையின் பிரதிபலிப்பு, புதிய சிந்தனை கொண்டவர்கள், புதிய காலத்தில் இருக்கிறார்கள். இந்த தலைமுறையை இந்தியா மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளது.தேசத்தை மிகப்பெரிய உயரத்துக்கு உயர்த்துவதற்கு இந்த தலைமுறையினருக்குத் தகுதி இருக்கிறது

மக்கள் அனைவரும் உள்நாட்டில் தயாரித்த பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி, சுதேசி பொருட்களை ஊக்கப்படுத்த வேண்டும். 2022-ம் ஆண்டில் நாம் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். ஆதலால், இளைஞர்கள், மக்கள் அனைவரும் உள்நாட்டில் தயாரித்த பொருட்களுக்கு ஊக்கம் அளித்து, உள்நாட்டு தயாரிப்புகளுக்கு வாழ்வளித்து, வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் எம்பிக்கள் ஆக்கப்பூர்வமான முறையில் நடத்தியுள்ளார்கள். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சிறப்பாக நடந்துள்ளதற்குப் பாராட்டுக்கள்.

புத்தாண்டில் , புதிய 10 ஆண்டில் புதிய தீர்மானங்கள், புதிய உற்சாகத்துடன், புதிய ஆர்வத்துடன், புதிய வைராக்கியத்துடன் தொடங்க வேண்டும்.

நாம் நீண்ட தொலைவு கடந்துவிட்டோம், பலசாதனைகளைப் படைத்திருக்கிறோம். புதிய உயரத்துக்குத் தேசத்தைக் கொண்டு சென்றிருக்கிறோம்.130 கோடி மக்களின் திறமையில், செயலில் அபரிமிதமான நம்பிக்கையைக் காண்பிப்போம்
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x