Last Updated : 29 Dec, 2019 10:00 AM

 

Published : 29 Dec 2019 10:00 AM
Last Updated : 29 Dec 2019 10:00 AM

‘பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்’ என்று கூறிய உ.பி. போலீஸ்: பாஜக மத்திய அமைச்சர் கடும் கண்டனம்

கடந்த வெள்ளியன்று மீரட் பகுதியில் உத்தரப்பிரதேச போலீஸார் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதியில் ‘பாகிஸ்தானுக்குப் போங்கள்’ என்று கூறிய வீடியோ வைரலானதையடுத்து மத்திய சிறுபான்மை நல அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி போலீஸார் மீது ‘நடவடிக்கை’ கோரி வலியுறுத்தியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உ.பி.யில் கடும் போராட்டங்கள் எழுந்து வன்முறையாக மாற போலீஸார் கடும் நடவடிக்கைகளில் களமிறங்கினர்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குக் கிடைத்த மொபைல் போன் வீடியோவில் மீரட் நகர காவல் உயரதிகாரி அகிலேஷ் நாராயண் சிங் போராட்டக் காரர்கள் இருவரிடம் ‘பாகிஸ்தானுக்குப் போங்கள்’ என்று கூறியது பதிவாகியிருந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ஏ.என்.ஐ. வெளியிட்ட செய்தியில் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, “வீடியோவில் அந்த போலீஸ் அதிகாரி கூறியிருப்பது உண்மை என்றால் அது கண்டனத்திற்குரியது என்பதோடு அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வன்முறையில் ஈடுபடும் யாராக இருந்தாலும் சரி, கும்பலாயினும் போலீசாராயினும் வன்முறைக்கு இங்கு இடமில்லை. ஜனநாயக நாட்டில் இதற்கு இடமில்லை. அப்பாவி மக்கள் பாதிப்படையாதவாறு பாதுகாப்பது போலீஸாரின் கடமை” என்றார்.

காவல் உயரதிகாரி அகிலேஷ் நாராயண் சிங் அந்த வீடியோவில் “உங்களுக்கு இங்கு வசிக்க விருப்பமில்லையெனில் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள், இங்கு வருவீர்கள் ஆனால் இன்னொன்றை புகழ்ந்து பேசுவீர்களா? ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து அனைவரையும் சிறையில் தள்ளி விடுவேன். அழித்து விடுவேன்” என்று கூறியதாக பதிவானதையடுத்து இந்த சர்ச்சை மூண்டது.

ஆனால் ஏடிஜிபி பிரசாந்த் குமார் தனியார் தொலைக்காட்சிக்குக் கூறும்போது "இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுந்தன, சில ஆட்சேபணைக்குரிய வாசகங்களுடன் நோட்டீஸ்களும் காணப்பட்டன, அந்தச் சூழலில்தான் அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் இங்கு வேண்டாம் என்றார்.

ஆனால் நம் போலீஸ் அதிகாரிகள் வார்த்தைகளைக் கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பயன்படுத்துவது நல்லது. எங்கள் போலீஸ் அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் தான் செயல்பட்டனர், அனைவரிடமும் மோசமாக நடந்து கொள்ளவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x