Published : 29 Dec 2019 07:24 AM
Last Updated : 29 Dec 2019 07:24 AM

ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை ஜனவரி 15-ல் அமலாகிறது- இதர மாநிலங்களிலும் படிப்படியாக நடைமுறைப்படுத்த முடிவு

புதுடெல்லி

ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை' திட்டம் வரும் 15-ம் தேதி அமலுக்கு வருகிறது. இதர மாநிலங்களிலும் படிப்படியாக இத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புக்காக மாநிலம்விட்டு மாநிலம் இடம்பெயரும் தொழிலாளர்களின் நலன் கருதி தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை' திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த திட்டம் சில மாநிலங்களில் ஏற்கெனவே சோதனை அடிப்படையில் அமலில் உள்ளது.

புதிய திட்டத்துக்காக நாடு முழுவதுக்கும் பொதுவான வடிவமைப்பில் ரேஷன் அட்டைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதே வடிவமைப்பு முறையைப் பின்பற்றி அனைத்து மாநிலங்களும் ரேஷன் அட்டையை தயாரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பொது ரேஷன் அட்டை 10 இலக்கங்கள் கொண்டதாக இருக்கும். இதில் பயனாளிகள்பற்றிய குறைந்தபட்ச தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

இந்நிலையில் முதல்கட்டமாக ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியாணா, ராஜஸ்தான், கோவா,மத்திய பிரதேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய 12 மாநிலங்களில் வரும் 15-ம் தேதி ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை' திட்டம் அமலுக்கு வருகிறது.

இதன்மூலம் சுமார் 4 கோடி தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தை நாட்டின் இதர மாநிலங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் சுமார் 79 கோடி மக்கள் பொது விநியோக திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகின்றனர். இதில் மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயரும் தொழிலாளர்கள், தாங்கள் குடியேறிய மாநிலத்தின் ரேஷன் கடையில் பொருட்களை பெற முடியாத சூழ்நிலை உள்ளது.இனிமேல் எந்தவொரு மாநிலத்திலும் எந்தவொரு ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம். ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். புதிய திட்டத்தின் மூலம் அவர்கள் பயன் பெறுவார்கள்.

இந்த திட்டத்தில் முறைகேடுகளைத் தவிர்க்க அனைத்து மாநிலங்களின் பொது விநியோகத் திட்டபயனாளிகளின் தொகுப்பு, மையப்படுத்தப்பட்ட சர்வரில் இணைக்கப்படுகிறது. இதன்மூலம் ஒரே பயனாளி, இரு மாநிலங்களில் ரேஷன்அட்டை பெறுவது தடுக்கப்படும். தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இலவச திட்டங்கள் அமலில்உள்ளன. வெளிமாநில தொழிலாளர்கள் இந்த இலவச சலுகைகளை பெற முடியாது.

ஜூனில் நாடு முழுவதும் அமல்

நாடு முழுவதும் சுமார் 5.4 லட்சம் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இதில் 77 சதவீதகடைகளில் பிஓஎஸ் எனப்படும் இயந்திரங்கள் உள்ளன. இந்த இயந்திரம் இருந்தால் மட்டுமே ‘ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை' திட்டத்தை செயல்படுத்த முடியும்.எனவே அனைத்து ரேஷன்கடைகளுக்கும் பிஓஎஸ் இயந்திரங்களை வழங்க மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் சில வாரங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், நாடு முழுவதும் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை' திட்டம் அமல் செய்யப்படும் என்று அறிவித்தார். இதன்படி தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஜூன் முதல் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் ‘ஒரே நாடு, ஒரேரேஷன் அட்டை' திட்டம் செயல்படுத்தப்படும். எனினும் இந்த திட்டத்தால் தமிழக மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று தமிழக அரசு தரப்பில் ஏற்கெனவே உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x