Last Updated : 28 Dec, 2019 11:50 AM

 

Published : 28 Dec 2019 11:50 AM
Last Updated : 28 Dec 2019 11:50 AM

தடுப்புக் காவல் முகாம் விவகாரத்தில் மோடிதான் பொய் சொல்கிறார்: மீண்டும் வலியுறுத்தும் ராகுல் காந்தி

தடுப்புக் காவல் முகாம் விவகாரத்தில் மோடி பொய் சொல்கிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி 2019-ம் ஆண்டுக்கான சிறந்த பொய்யர் போட்டிக்கு தகுதியானவர் என்று பாஜக விமர்சித்திருந்தது. இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்கள் ராகுலிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "அண்மையில் நான் ஒரு வீடியோவை என் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதில், மோடி நாட்டில் எங்குமே தடுப்புக் காவல் முகாம்கள் இல்லை எனப் பேசியிருப்பார். அடுத்த காட்சியிலேயே தடுப்புக் காவல் முகாம்களின் படங்கள் இடம்பெற்றிருக்கும். யார் பொய் சொல்கிறார்கள் என்பதை இப்போது நீங்களே வீடியோவைப் பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்" என்று பதிலளித்தார்.

முன்னதாக கடந்த வியாழனன்று ராகுல் வெளியிட்டிருந்த ட்விட்டர் வீடியோவில், அசாமில் தடுப்புக் காவல் முகாம்களை நோக்கிச் செல்லும் சாலைகளும் தொடர்ந்து மோடியின் மறுப்புப் பேச்சும் இடம்பெற்றிருக்கும். மேலும், ஆர்எஸ்எஸ் பிரதமர் பாரதமாதாவிடம் பொய் பேசியுள்ளார் என்றும் அதில் ராகுல் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பாஜகவின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பித்ரா, ராகுல் பொய்யர்களின் தலைவர் என்று விமர்சித்திருந்தார்.
இதேபோல், தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியன ஏழை மக்கள் மீதான தாக்குதல் என்று ராகுல் கூறியிருந்ததற்கு , "ராகுல் காந்தியை 2019-ம் ஆண்டுக்கான சிறந்த பொய்யர் போட்டிக்கான வேட்பாளராக்கலாம்.

ராகுல் காந்தி தொடர்ந்து பொய் பேசுகிறார். அவரது பொய்களால் இதுநாள் வரை ஒரே ஒரு குடும்பம் மட்டுமே பாதிக்கப்பட்டது. தற்போது ஒட்டுமொத்த காங்கிரஸும் பாதிக்கப்படுகிறது" என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் விமர்சித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x