Published : 28 Dec 2019 07:41 AM
Last Updated : 28 Dec 2019 07:41 AM

இந்திய விமானப் படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து பிரியாவிடை பெற்ற மிக் - 27 போர் விமானங்கள்

இந்திய விமானப் படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய மிக் - 27 ரக போர் விமானங்களுக்கு நேற்றுடன் ஓய்வு வழங்கப்பட்டன. அவற்றுக்கு விமானப்படை வீரர்கள் பிரியாவிடை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

இந்திய விமானப்படையில் 1985-ம் ஆண்டு மிக் - 27 ரக போர் விமானங்கள் சேர்க்கப்பட்டன. இந்த போர் விமானங்கள் முதலில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்தன. பின்னர், இந்தியாவின் ‘இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்' நிறுவனமே இந்த விமானங்களை கட்டமைக்க தொடஙகியது.

பல நவீன அம்சங்களை கொண்டு விளங்கிய இந்த போர் விமானம், மணிக்கு 1,700 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் பெற்றது. அதுமட்டுமின்றி, ஒரே சமயத்தில் 4 டன் எடைகொண்ட ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியதாகவும் விளங்கியது.

எதிரிகளின் இலக்குகளை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் இந்த மிக் - 27 போர் விமானங்கள், இந்தியாவின் கார்கில் போர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றின. இதன் காரணமாக, விமானிகளால் ‘பகதூர்' (மகத்தானவர்) என இவை அழைக்கப்பட்டு வந்தன.

இதனிடையே, 34 ஆண்டுகள் பணிபுரிந்ததால் இந்த ரக போர் விமானங்களுக்கு ஓய்வு வழங்க விமானப் படை முடிவு செய்தது. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் மிக் - 27 ரக போர் விமானங்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டன. இருந்தபோதிலும், ராஜஸ்தானின் ஜோத்பூர் படைப்பிரிவில் மட்டும் மிக் - 27 ரகத்தைச் சேர்ந்த 7 விமானங்கள் பயன்பாட்டில் இருந்து வந்தன.

இந்நிலையில், அந்தப் படைப்பிரிவில் இருந்த மிக் - 27 போர் விமானங்களுக்கும் நேற்று ஓய்வு வழங்கப்பட்டன. விடைபெறுவதற்கு முன்பு அந்த விமானங்கள் கடைசியாக விண்ணில் சீறி பாய்ந்து சாகசங்கள் செய்தன. பின்னர், தரையிறங்கிய அந்த விமானங்களுக்கு விமானப்படை வீரர்கள் ராணுவ மரியாதையுடன் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x