Last Updated : 27 Dec, 2019 09:30 PM

 

Published : 27 Dec 2019 09:30 PM
Last Updated : 27 Dec 2019 09:30 PM

ராகுல், மம்தா, பவார், தாக்கரே, கேஜ்ரிவால், மு.க.ஸ்டாலின்: ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு விழாவில் குவியும் எதிர்க்கட்சி தலைவர்கள்

வரும் ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் நடைபெறும் ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் குவிய உள்ளனர். இப்பட்டியலில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மம்தா பானர்ஜி, சரத் பவார், உத்தவ் தாக்கரே, அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டப் பலருடன் ஸ்டாலின் மற்றும் கனிமொழியும் பங்கேற்கிறார்கள்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில், ஹேமந்த் சோரன் தலைமையில் அமைந்த மெகா கூட்டணி வெற்றி பெற்றது.

இதனால், அங்கு முதன்முறையாக ஐந்து வருடம் ஆட்சிசெய்த பாஜகவால் அதை மீண்டும் தொடர முடியவில்லை. மெகா கூட்டணியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்), காங்கிரஸ் மற்றும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றன.

எனவே, ஜேஎம்எம் தலைவர் சிபு சோரனின் மகனும் அக்கட்சியின் செயல் தலைவரான ஹேமந்த் சோரன் அம்மாநிலத்தின் 11 ஆவது முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதற்காக ராஞ்சியின் மோர்ஹாபாடி மைதானத்தில் பிரம்மாண்டமான முறையில் நண்பகல் 1.00 மணிக்கு விழா நடைபெற உள்ளது.

இதில், பல்வேறு எதிர்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் இடம் பெற உள்ளனர். இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உபி பொறுப்பாளரான பிரியங்கா வத்ரா மற்றும் ப.சிதம்பரம் உள்ளிட்ட முன்னாள் மத்திய அமைச்சர்களும் அக்கட்சியின் மூத்த தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்

காங்கிரஸ் முதல்வர்கள்

ராஜஸ்தானின் அசோக் கெல்லோட், மத்தியபிரதேசத்தின கமல்நாத், பஞ்சாபின் கேப்டன் அம்ரீந்தர்சிங் மற்றும் சத்தீஸ்கரின் பூபேஷ் பகேல் உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களும் இடம் பெறுகின்றனர்.

இவர்களுடன் திரிணமூல் காங்கிரஸின் மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி முதல்வரான அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் சிவசேனாவின் மகராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயும் கலந்து கொள்கின்றனர்.

பல்வேறு முன்னாள் மாநில முதல்வர்களும், துணை முதல்வர்களும் இவ்விழாவில் பங்கேற்கின்றனர். இதில், உபி சமாஜ்வாதி அகிலேஷ்சிங் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜின் மாயாவதி, கர்நாடகாவின் மதசார்பற்ற ஜனதா தளத்தின் எச்.டி.குமாரசாமி மற்றும் ஆந்திராவின் தெலுங்தேசத்தின் சந்திரபாபு நாயுடு ஆகியோர் உள்ளனர்.

தமிழக தலைவர்கள்

தமிழகத்தில் இருந்தும் எதிர்கட்சிகள் சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மகளிரணி தலைவர் மு.க.கனிமொழி மற்றும் மக்களவையின் திமுக தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் பதவி ஏற்பில் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கு ஹேமந்த் தொலைபேசியில் தொடர்புகொண்டு சிறப்பு அழைப்பு விடுத்திருந்தார்.

ஹேமந்த் சோரனின் பதவி ஏற்பில் காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் குடியரசு தலைவருமான பிரணாப் முகர்ஜியும் கலந்து கொள்கிறார். இவருக்கு ஹேமந்த் டெல்லியில் நேரில் சென்று விடுத்த அழைப்பு ஏற்கப்பட்டுள்ளது.

பிஹாரின் முன்னாள் துணை முதல்வரும் லாலுவின் மகன்களான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் பிரசாத் யாதவ் ஆகியோரும் விழாவில் கலந்து கொள்கின்றனர். டெல்லி ஜேஎன்யூவின் முன்னாள் மாணவர் தலைவரும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் இளம் தலைவருமான கன்னைய்யா குமாரும் பதவி ஏற்பில் கலந்து கொள்கிறார்.

மேற்கண்டவர்கள் உள்ளிட்ட பதவி ஏற்பிற்கு வரும் 30 தலைவர்களும் ஜார்கண்ட் மாநில சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவரும் அன்று மாலை ஜார்கண்ட் ஆளுநர் திரவுபதி முர்மூ, முதல்வர் ஹேமந்திற்கு அளிக்கும் தேநீர் விருந்திலும் கலந்து கொள்கின்றனர்.-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x