Last Updated : 27 Dec, 2019 01:13 PM

 

Published : 27 Dec 2019 01:13 PM
Last Updated : 27 Dec 2019 01:13 PM

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம்: நார்வே பெண் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு

பிரதிநிதித்துவப்படம்

கொச்சி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய நார்வே நாட்டுப் பெண், விசா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி அவரை நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன

கேரளாவில் கடந்த 23-ம் தேதி நடந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் நார்வே நாட்டுப் பெண் ஜானே மீட் ஜான்ஸன்(வயது71) பங்கேற்றார். அதுமட்டுமல்லாமல் தனது முகநூல் பக்கத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்த நார்வே நாட்டுப் பெண் ஜானே மீட் ஜான் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று, முகநூலில் கருத்துக்களைத் தெரிவித்தது இந்தியாவின் விசா நெறிமுறைகளுக்கு எதிரானதாகும்.

இதையடுத்து, கொச்சியில் ஜான்ஸன் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்ற இந்திய குடியேற்றத்துறை அதிகாரிகள் அவரை உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேறுமாறும், விசா விதிமுறைகளை மீறிவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போரட்டத்தில் பங்கேற்ற ஜான்ஸன்

ஆனால், அதற்கு ஜான்ஸன் தனக்கு இந்திய அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக காரணங்களை தெரிவித்தால்தான் வெளியேற முடியும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், எழுத்துப்பூர்வமாக ஏதும் தரமுடியாது என்று தெரிவித்த அதிகாரிகள் தாமதித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, நார்வே பெண் ஜான்ஸன் தூபாயில் இருக்கும் தனது தோழி மூலம் துபாய்க்கு சென்று, அங்கிருந்து நார்வே செல்ல முடிவு செய்துள்ளார். மேலும், துபாய் செல்லும் டிக்கெட்டை பார்த்து ஆய்வு செய்தபின்தான் அதிகாரிகள் ஜான்ஸனை வி்ட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து கொச்சியில் உள்ள வெளிநாட்டினர் மண்டல பதிவேடு அலுவலகத்தின் அதிகாரி அனூப் கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், " சமூக ஊடகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நார்வே பெண் ஜான்ஸன் எழுதியிருந்ததும், 23-ம் தேதி நடந்த போராட்டத்திலும் பங்கேற்றது தெரியவந்தது.

இது இந்தியாவின் விசா விதிமுறைகளுக்கு முரணானது. இதையடுத்து, உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பெயரில் ஜான்ஸனிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறக் கேட்டுக்கொள்ளப்பட்டது " எனத் தெரிவித்தார்

இதுகுறித்து நார்வே பெண் ஜான்ஸன் கூறுகையில்," அதிகாரிகள் என்னிடம் வந்து விசா விதிமுறைகளை மீறிவிட்டதாகவும், குடியுரிமைச் சட்டத்துக்கு போராடுவது விதிமுறை மீறிய செயல் என்றும் தெரிவித்தனர். ஆதலால், உடனடியாக இந்தியாவை விட்டுச் செல்லவும் கேட்டுக்கொண்டனர். எழுத்துப்பூர்வமாக நான் கேட்டதற்கும் மறுத்துவிட்டனர். துபாய்க்கு நான் டிக்கெட் முன்பதிவு செய்து அதை அவர்களிடம் விசாரணையின் போது அளித்தபின்புதான் என்னை விட்டு அதிகாரிகள் அகன்றனர்" எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x