

உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடியின் தொகுதியில் நடந்த குடியுரிமைப் போராட்டத்தின் போது பெற்றோர் கைது செய்யப்பட்டதையடுத்து, பாலுக்காக தனது தாயைக் காணாமல் பச்சிளங்குழந்தை நாள்தோறும் கண்ணீர் வடித்து வருகிறது
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்தது. இதில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதிக்கு உட்பட்ட பெனியா பாக் பகுதியில் ஏராளமானோர் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்தது கடந்த 19-ம் தேதி போராட்டம் நடத்தினார்கள். அங்கு அப்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால், தடையை மீறி போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களில் ஏக்தா(32) ரவி சங்கர்(36) இருவரும் கணவன், மனைவியாவர். இவர்கள் இருவரும் கிளேமேட் அஜென்டா எனும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 14 மாதத்தில் சம்பக் எனும் பெண் குழந்தை உண்டு.
வீட்டில் தனது தாய் ஷீலா திவாரியிடம் குழந்தை ஒப்படைத்துவிட்டு, ஏக்தா போராட்டத்துக்கு சென்றார். ஆனால், போராட்டத்தில் கைது செய்யப்பட்டுக் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக ஏக்தா சிறையில் உள்ளார். 14 மாதங்களே ஆன குழந்தை சம்பக் தாய் ஏக்தாவிடம் பால்குடித்து வருகிறார். கடந்த ஒருவாரமாகத் தாயைக் காணாமல் குழந்தை சம்பக் அழுது கண்ணீர் வடித்து வருகிறாள்.
ஏக்தாவின் தாயார் ஷிலா திவாரி, குழந்தை ஏமாற்றியும், கதைகள் சொல்லியும், விளையாட்டு செய்தும், உணவளித்து வருகிறார் .
இதுகுறித்து ஷிலா திவாரியிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறுகையில், " குடியுரிமை சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த சென்ற எனது மகளை போலீஸார் கைது செய்துவிட்டனர்.ஜாமீனும் கிடைக்கவில்லை. எனது மகளின் 14 மாத குழந்தையை என்னால் சமாளிக்க முடியவில்லை.
தாயிடம் பால் அருந்தாமல், உணவு சாப்பிடக் குழந்தை மறுக்கிறாள். அம்மா வேலைக்குச் சென்றிருக்கிறார் என்று கூறியும், விளையாட்டு காட்டியும், செல்போனைக் கொடுத்து ஏமாற்றியும் உணவு வழங்கினாலும் சாப்பிட மறுக்கிறாள். செல்போனை பார்த்துக்கொண்டே இருப்பதால், குழந்தையின் கண்களும் சிவந்து விடுகின்றன. தாய் இல்லாமல் குழந்தை தவிப்பது புரிகிறது. விரைவில் என் மகளுக்கு ஜாமீன் கிடைக்கும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்
இதுகுறித்து பெனியா பாக் போலீஸ் எஸ்பி. பிரபாகர் சவுத்ரி கூறுகையில், " பெனியா பாக்கில் 144தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்திய 200 பேரில் 56 பேர் அடையாளம் கண்டுள்ளோம். அவர்களைக் கைது செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்
இதற்கிடையே ரவி, ஏக்தா இருவருக்கும் ஜாமீன் வழங்க உள்ளூர் நீதிமன்றம் மறுத்துவிட்டதால், மனு வரும் 1-ம்தேதி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.