

கர்நாடக மாநிலம், கலாபுர்க்கி மாவட்டத்தில் உடல் ஊனக் குறைபாடு நீங்குவதற்காக 4 குழந்தைகளைக் கழுத்தளவு குழிக்குள் இறக்கி வினோத வழிபாடு நடத்தப்பட்டது.
வான்வெளியில் அரிய நிகழ்வான பகுதியில் சூரிய கிரகணம் இன்று ஏற்பட்டதையடுத்து, இந்தியாவின் பல இடங்களில் அதைக் காண முடிந்தது. அதாவது சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வந்து சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதே சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் இன்று நிகழ்ந்த சூரிய கிரகணம் வளையச் சூரிய கிரகணம் என்று அழைக்கப்பட்டது. அதாவது சூரியனை முழுமையாகச் சந்திரன் மறைக்காமல் அதன் நடுப்பகுதியை மட்டும் மறைத்ததால், சந்திரனைச் சுற்றி ஒளிவட்டம் வந்தது. இதற்கு வளையச் சூரிய கிரகணம் என்று பெயர்.
இந்த சூரிய கிரகணத்தன்று நம் மக்களிடையே காலம்காலமாக பல்வேறு மூட நம்பிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் கர்ப்பிணிப் பெண்கள் சூரிய கிரகணத்தன்று வெளியே நடமாடக்கூடாது, கிரகணம் நிகழும்போது சாப்பிடக்கூடாது, குளிக்க வேண்டும் என்ற பல்வேறு நம்பிக்கைகள் சொல்லப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் கலாபுர்க்கி மாவட்டத்தில் உள்ள தாஜ்சுல்தான்பூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மூட நம்பிக்கையைப் பின்பற்றி மக்கள் வினோதமாக ஒரு செயலைச் செய்துள்ளனர்.
அதன்படி, சூரிய கிரகணத்தன்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் 4 பேரை உயிருடன் கழுத்தளவு குழிக்குள், சேற்றை நிரப்பி அதில் இறக்கிப் புதைத்து வைத்தால், அவர்களின் உடல் குறைபாடு சரியாகும் என நம்பி இதைச் செய்துள்ளனர்.
3, 4, 8, 11 வயதில் உள்ள 4 குழந்தைகளும் மாற்றுத்திறனாளிகள். இவர்களின் உடல் குறைபாட்டைச் சரிசெய்யவே இந்த முறையை அந்தக் குழந்தைகளின் பெற்றோர் இதைக் கையாண்டதாகத் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து போலீஸாருக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அவர்கள் வந்து குழந்தைகள் 4 பேரையும் மீட்டுள்ளனர். அந்தக் குழந்தைகளின் பெற்றோரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஒரு பெண் குழந்தையின் தந்தை நிருபர்களிடம் கூறுகையில், "எங்கள் முன்னோர்கள் சூரிய கிரகணத்தன்று இதேபோன்று மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் குழிக்குள் கழுத்தளவுக்குப் புதைத்து வைத்தால், அவர்களின் உடல் குறைபாடு சரியாகிவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் மருத்துவ சிகிச்சை ஏராளமாக எடுத்தும் குழந்தைக்குப் பலன் அளிக்கவில்லை. ஆதலால், இந்த முறையைக் கையாண்டோம்.
இந்த சிகிச்சை முறையால், உடல்நலம் சரியாகுமா என எனக்குத் தெரியாது. முன்னோர்கள் கூறியதைச் செய்தோம்" எனத் தெரிவித்தார்.
மற்றொரு குழந்தையின் தாய் நிருபர்களிடம் கூறுகையில், " எங்கள் குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக ஏராளமாகச் செலவு செய்துவிட்டோம். நம்பிக்கையின் அடிப்படையில் இந்த சிகிச்சையைச் செய்தோம். சூரிய கிரகணத்தன்று குழிக்குள் இறக்கினால் குணமாகும் என்று கூறியதால், முயன்றோம்" எனத் தெரிவித்தார்.
இதேபோன்று விஜயபுரா மாவட்டத்திலும் இரு சம்பவங்கள் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூரிய கிரகணம் , சந்திர கிரகணம் நடக்கும்போதெல்லாம் கர்நாடக மாநிலத்தில் பல மாவட்டங்களில் இதுபோன்று குழிக்குள் குழந்தைகளை இறக்கி சிகிச்சை செய்வதை மக்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.