Last Updated : 26 Dec, 2019 03:03 PM

 

Published : 26 Dec 2019 03:03 PM
Last Updated : 26 Dec 2019 03:03 PM

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மீண்டும் பேரணி; நெருப்புடன் விளையாடாதீர்கள்: மத்திய அரசுக்கு மம்தா எச்சரிக்கை

மத்தியில் ஆளும் பாஜக அரசு நெருப்புடன் விளையாடக் கூடாது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை அமைதியான வழியில் போராடுவோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்கள், அசாம், டெல்லி, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் மக்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். இதில் உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதையடுத்து, 16 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 15 நாட்களாக இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடந்து வருகிறது. பல ரயில்கள், ரயில் நிலையங்கள் எரிக்கப்பட்டன. பேருந்துகள் உள்ளிட்ட பொதுச்சொத்துகள் சேதமடைந்தன. குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.

என்ஆர்சி, குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றை மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்தமாட்டேன் என மக்களிடம் வாக்குறுதி அளித்துள்ள மம்தா பானர்ஜி இதுவரை 5-க்கும் மேற்பட்ட பேரணிகளைக் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகக் கொல்கத்தாவில் நடத்தியுள்ளார்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கொல்கத்தாவில் ராஜா பஜார் பகுதியில் இருந்து முல்லிக் பஜார் பகுதி வரை திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பேரணி நடந்தது.

இந்தப் பேரணியின் முடிவில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது

''குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராடினால், அவர்களை பாஜகவினர் மிரட்டுகின்றனர். குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் போராடும் அரசியல் கட்சிகள் மீது கறுப்பு சாயத்தையும், தங்கள் கட்சியின் மீது வெள்ளைச் சாயத்தையும் பாஜக பூசிக் கொண்டு தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்கிறது.

கர்நாடகாவில் கடந்த டிசம்பர் 19-ம் தேதி குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்களில் சிலர் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்கள்.

ஆனால், மாநில முதல்வர் எடியூரப்பா, போராட்டத்தில் பலியானவர்கள் வன்முறையில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் உறுதியானால், அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு ரூபாய் கூட நிவாரணம் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார். பாஜக மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு எப்போதும் நான் துணையாக, ஆதரவாக இருப்பேன். யாருக்காகவும் மாணவர்கள் அச்சப்படக் கூடாது. டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், கான்பூர் ஐஐடி, உள்ளிட்ட இதர பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் குடியுரிமைச் சட்டம், என்ஆர்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டம் நடத்திய மாணவர்களை பாஜகவினர் மிரட்டுகின்றனர். மாணவர்கள் 18 வயதுக்கு மேல் ஆகிவிட்டால், அவர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். அவர்கள் எங்காவது போராட்டம் நடத்தினால் அங்கு பாதிப்பு ஏற்படும். பாஜகவினர் நெருப்புடன் விளையாடுகின்றனர்.

குடியுரிமைச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும்வரை திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அமைதியான வழியில் போராடும்''.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x