குடியுரிமைச் சட்டம்; குழப்பத்தை ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகள்: அமித் ஷா கடும் சாடல்

குடியுரிமைச் சட்டம்; குழப்பத்தை ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகள்: அமித் ஷா கடும் சாடல்
Updated on
1 min read

குடியுரிமைச் சட்டத்தை பற்றி எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே மக்களை தவறாக வழிநடத்துகின்றன, குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. உ.பி.யில் நடந்த போராட்டத்தின்போது பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இந்தநிலையில் டெல்லியில் டெல்லி வளர்ச்சி வாரியத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

‘‘காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் வேண்டுமென்றே மக்களை தவறாக வழிநடத்துகின்றன. குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. டெல்லியில் அமைதியான சூழலை கெடுக்கும் வேலையை எதிர்க்கட்சிகள் செய்கின்றன.

இதனால் டெல்லியில் அமைதியான சூழல் கெடுகிறது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் தோல்வியை பரிசாக வழங்குவார்கள். டெல்லியில் பாஜக ஆட்சியமைக்கும்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in