

உ.பி.யில் நிலவும் கடும் குளிருக்கு இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர். 3 டிகிரி செல்சியஸுடான பனிமூட்டத்தால் சுமார் 100 ரயில்கள் பல மணிநேரம் தாமதமாகச் செல்கின்றன.
ஒவ்வொரு வருடமும் வட மாநிலங்களில் நிலவும் குளிருக்கு உத்தரப் பிரதேசத்தில் பாதிப்பு அதிகம். இந்த வருடக் குளிருக்கு கடந்த புதன் வரை 25 பேர் பலியாயினர்.
இவற்றில், உ.பி.யின் மத்தியப் பகுதியிலுள்ள புந்தேல்கண்ட் மற்றும் கான்பூரில் அதிகபட்சமாக 15 பேர் பலியாயினர். புந்தேல்கண்டின் பாந்தாவில் 3, சித்ரகுட் மற்றும் மஹோபாவில் தலா 2 என மொத்தம் 9 பேர் பலியாயினர்.
கான்பூரின் ஜலோன், கன்னோஜ், இதன் ஊரகப்பகுதி ஆகியவற்றில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதே மாநிலத்தின் பூர்வாஞ்சல் பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் ஐந்து பேர் பலியாகினர்.
இந்த ஐந்தில், பதோஹியில் 2, காசி எனும் வாரணாசி, சண்டவுலி மற்றும் பலியாவில் தலா ஒரு உயிர் பலியாகி விட்டன. நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் உ.பி.யின் குறைந்தபட்ச குளிர் 1.4 டிகிரி செல்சியஸாகக் குறைந்து சாதனை படைத்துள்ளது.
சூரியன் இல்லை
இந்த நாளில், உ.பி.யின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிஜ்னோர், முசாபர் நகர், ஷாம்லி, சஹரான்பூர் ஆகிய மாவட்டங்களில் சூரியனே தெரியாமல் இருந்துள்ளது. இதன் மற்ற மாவட்டங்களான ஆக்ரா, அலிகர், மீரட், மத்துரா, அம்ரோஹா மற்றும் புலந்த் ஷெஹர் ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான குளிரினால் பொதுமக்களின் அன்றாடப் பணிகள் கடுமையாகப் பாதிகப்பட்டன.
நெடுஞ்சாலை விபத்துகள்
இதனால், நெடுஞ்சாலைகளிலும் நிலவிய அதிக பனிமூட்டம் காரணமாக யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் ஆறு வாகன விபத்துகள் ஏற்பட்டன. எனினும், இந்த விபத்துகளில் அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏற்படவில்லை.
விமான சேவைகள் ரத்து
இந்நிலையில், அதிகமாக நிலவும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இருந்து கான்பூர் செல்லும் அனைத்து விமானங்களின் சேவைகளும் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டன. இன்று வியாழக்கிழமையில் டெல்லியில் இருந்து அகமதாபாத் மற்றும் மும்பை செல்லும் விமானங்கள் ரத்தாகின.
நாட்டின் பல பகுதிகளில் இருந்து உ.பி. வழியாக டெல்லிக்கு வரும் ரயில்கள் பலவும் 5 முதல் 30 மணிநேரம் வரை தாமதமாகச் செல்கின்றன. இதுபோன்ற நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்களின் தாமதப் பயணத்தால் அதன் ஆயிரக்கணக்கான பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பயிர்கள் நாசம்
இதனிடையே, உ.பி. விவசாயிகளின் பயிர்களும் நாசமடையும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதில், காய்கறி, பப்பாளி, மாம்பழம், சீரகம், கொத்தமல்லி உள்ளிட்ட பல பயிர்கள் இடம் பெற்றுள்ளன.
வானிலை எச்சரிக்கை
வரும் நாட்களில் உ.பி.யில் குளிர் மேலும் அதிகமாகும் என அம்மாநில அரசின் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன்படி, உ.பி.யின் தலைநகரான லக்னோவிலும் மிகக்குறைவாக 5 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.