130 கோடி இந்தியர்களும் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

ஆர்எஸ்எஸ்அமைப்பின் தலைவர் மோகன் பகவத் நேற்று பேசிய காட்சி
ஆர்எஸ்எஸ்அமைப்பின் தலைவர் மோகன் பகவத் நேற்று பேசிய காட்சி
Updated on
1 min read

இந்தியாவில் வசிக்கும் 130 கோடி இந்தியர்களும் மதத்தால், வாழுமிடத்தால், கலாச்சாரத்தால் வெவ்வேறாக இருந்தாலும் அவர்கள் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்

தெலங்கானா மாநிலத்தில் உள்ள இப்ராஹிம்பட்டிணத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் இரு நாட்கள் விஜய சங்கல்ப சிபிரம் நடந்தது. கடந்த 2014-ம் ஆண்டு தெலங்கானா உருவான பின் ஆர்எஸ்எஸ் சார்பில் மாநில அளவில் நடந்த முதல் கூட்டம் இதுவாகும்.

இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ரெட்டி, தெலங்கானா பாஜக தலைவர் கே.லட்சுமண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது

இந்தியாவில் வாழும் 130 கோடி இந்தியர்களும், மதத்தால், கலாச்சாரத்தால், வாழுமிடத்தால் வேறாக இருந்தாலும் அனைவரும் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

தேசப்பற்று, இந்தியக் கலாச்சாரம், பாரம்பரியத்தின் மீது மதிப்பு வைத்துள்ள அனைவரும் இந்து சமூகத்தின் ஒருபகுதியினர்தான்.

இந்து சமூகம் என நான் குறிப்பிடும்போது, இந்தியாவை தங்களின் தாய்நாடாகக் கருதுபவர்கள், அதனை நேசிப்பவர்கள், தேசிய உணர்வுடன் இருப்பவர்கள், கலாச்சாரத்தை மதிப்பவர்கள் அடங்கிவிடுகிறார்கள். பேசும் மொழி, பின்பற்றும் மதம், வழிபாடு, அல்லது கடவுளை வழிபடாமல் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்தியாவின் குழந்தைகள்தான்.

அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து வீடுதோறும் மக்களிடம் சென்று தொண்டர்கள் விளக்க வேண்டும்.

தர்ம விஜய் என்பதுதான் ஆர்எஸ்எஸ், இந்து சமூகம், இந்தியாவின் நோக்கம். இந்த தேசம் பாரம்பரியமாக இந்துத்துவாவைக் கொண்டது.

ஆர்எஸ்எஸ் தொண்டர்களும், அதன் பின்பற்றுபவர்களும் நாள் தோறும் ஒருமணிநேரம், தர்மவிஜயை பின்பற்ற வேண்டும். இது சங்கத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி, அனைத்து இந்தியர்களின் சிந்தனையாக இருத்தல் வேண்டும்

தர்ம விஜய்காக பணியாற்றுபவர்கள் அனைவரும், தேசத்தின், சமூகத்தின் நலனுக்காக பணியாற்றுபவர்கள், மற்றவர்களின் துன்பத்தைப் போக்கி சுயநில்லாமல் வாழ்பவர்கள்.

ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதுபோலத்தான் சுயநலமின்றி மற்றவர்களின் துன்பத்தைப் போக்க உழைக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும், வாழுமிடத்திலும் சுயநல நோக்கு இல்லாமல் வாழும் தொண்டர்கள் தேவை. இது சமூகத்தையும், தேசத்தையும் மாற்றும்.

இந்த உலகம் அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றுக்காக இந்தியாவை உற்று நோக்குகிறது. இதை இந்து சமூகம் மட்டுமே வழங்க முடியும்

இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in