

மகாராஷ்டிராவில் நீர்ப்பாசன ஊழல் வழக்கில் இருந்து அஜித் பவார் விடுவிக்கப்பட்டது தொடர்பாக, மாநில ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் பிரமாண பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 1999 முதல் 2014 வரையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் உள்ளிட்ட சிலர் நீர்ப்பாசனத் துறைக்கு பொறுப்பு வகித்தனர்.
இந்நிலையில் 2014-ல் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றது. முந்தைய ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஊழல் தடுப்பு அமைப்பு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த 19-ம் தேதி ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநர் பரம்பிர் சிங் உயர் நீதிமன்ற கிளையில் மேலும் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார். அதில் இந்த ஊழலில் அஜித் பவாருக்கு தொடர்பு இல்லை என கூறப்பட்டிருந்தது.
மேலும் அதில், “நீர்ப்பாசன திட்ட ஊழல் வழக்கில், கடந்த ஆண்டு ஊழல் தடுப்பு பிரிவின் இயக்குநராக இருந்த சஞ்சய் பார்வே பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில் இந்த ஊழலில் அஜித் பவாருக்கு உள்ள தொடர்பு பற்றிய அறிக்கையை பார்வே கவனிக்கவில்லை” என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், பரம்பிர் சிங் இது தொடர்பாக கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த வாரம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சிறு பிழை இருந்ததாகவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது, “அஜித் பவாருக்கு உள்ள தொடர்பு பற்றிய அறிக்கையை முன்னாள் இயக்குநர் சஞ்சய் பார்வே பார்த்தார்” என கூடுதல் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கடந்த நவம்பர் 27-ம் தேதி ஊழல் தடுப்பு பிரிவு உயர் நீதிமன்ற கிளையில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதிலும் நீர்ப்பாசன ஊழலில் அஜித் பவாருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.