

34 ஆண்டுகளுக்குப் பின்..
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1981-ம் ஆண்டு யுஏஇ சென்றார். இந்நிலையில், கடந்த 34 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியப் பிரதமர் யுஏஇ மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வு.
மரபுகள் மீறி வரவேற்பு
* பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயேத் அல் நயான், மரபுகளுக்கு மாறாக பிரதமரை விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். அவருடன் அவரது 5 சகோதரர்களும் வந்திருந்தனர். விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து எமிரேட் பேலஸ் ஹோட்டலுக்கு சென்றார் பிரதமர்.
முதல் ட்வீட்
அபுதாபி வந்து சேர்ந்ததும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அரபி மொழியில் விடுத்த செய்தியில், “எனது பயணத்தால் இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே உறவுகள் வலுவடையும் என உறுதியாக நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.
ஷேக் சயீத் மசூதியில் மோடி
பிரதமர் மோடி தனது பயணத்தில் முதல் நிகழ்ச்சியாக ஷேக் சயீத் பெரிய மசூதிக்கு சென்றார். இஸ்லாமிய கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழும் இந்த மசூதி, சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதீனா மசூதிகளுக்குப் பிறகு உலகின் 3-வது மிகப்பெரிய மசூதியாக திகழ்கிறது. அமீரக அதிகாரிகள் மோடிக்கு மசூதியை சுற்றிக் காண்பித்து அதன் நுண்கலை குறித்து விவரித்தனர்.
மசூதியில் செல்ஃபீ
அமீரகத்தை சேர்ந்த ஷேக்களுடன் பிரதமர் மோடி மசூதியில் செல்ஃபீ எடுத்துக் கொண்டார். தனது வெளிநாடு பயணங்களில் அங்குள்ள மக்களுடன் செல்ஃபீ எடுப்பதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். இம்முறை, இளவரசர் ஷேக் நயான் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அன்வர் கர்காஷ் ஆகியோருடன் ஷேக் ஜயீத் மசூதியில் #Selfie எடுத்துக் கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தை பகிர்ந்திருந்தார்.
"வெளிநபர் தலையீடு கூடாது"
அபுதாபியில் கலீஜ் டைம்ஸ் என்ற நாளேட்டுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, "பிராந்திய அல்லது இருதரப்பு பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட நாடுகளே பேசி தீர்த்துக்கொள்வது சிறந்ததாக இருக்கும். வெளிநபர் தலையீட்டால் ஏற்படும் விளைவுகளை நாம் அடிக்கடி பார்க்கிறோம்.
இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுடன் இந்தியா நல்லுறவை பேணுகிறது. பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கையை இந்தியா எப்போதும் கடைபிடிக்கிறது. அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையே இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது.
இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அனைத்து நாடுகளின் கூட்டு முயற்சி மற்றும் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
யுஏஇ- மஸ்தர் நகர தொழில் நிறுவனங்களை மோடி பார்வையிட்டார். | படம்: வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப்.
சைவ விருந்து:
பிரதமர் மோடிக்கு இளவரசர் ஷேக் முகமது நயான் இரவு விருந்தளித்தார். மோடிக்காக பிரத்யேகமான சைவ உணவை சிறப்பு சமையல் கலை நிபுணர் சஞ்ஜீவ் கபூர் தயாரித்தார். பிரதமருக்காக சமைக்க தனது குழுவுடன் அமீரகம் சென்றுள்ளதை சஞ்ஜீவ் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
நிறைந்த துபாய் கிரிக்கெட் அரங்கு
பிரதமர் நரேந்திர மோடி துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மத்தியில் ஆற்றும் உரையைக் கேட்பதற்கு மிகுந்த ஆர்வம் நிலவியது. சுமார் 40,000 பேர் மட்டுமே பார்வையாளர்களாக அமரத் தகுந்த அந்த மைதானத்தில், மோடியின் உரையைக் கேட்க 50,000 இந்தியர்கள் முன்பதிவு செய்தனர். மேலும், மைதானத்தில் வெளியிலும் 16,000 பேர் உரையைக் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அபுதாபியில் முதல் இந்து கோயில்:
அபுதாபியில் முதல் இந்து கோயிலைக் கட்ட அமீரக அரசு நிலம் ஒதுக்குவதாக உறுதி செய்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமீரகத்தின் இந்த அறிவிப்புக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அபுதாபியில் கோயில் கட்ட நிலம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளதுக்கு நன்றி. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செயல்" என்று குறிப்பிட்டார்.
இந்திய பணியாளர்களுடன் சந்திப்பு
சுமார் 20 லட்சம் இந்தியர்கள் யு.ஏ.இ.-யின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுகின்றனர். இதில் 60 சதவீதத்தினர் உயர்மட்ட வேலைகளில் உள்ளனர். தொழில் நகரமான அபுதாபியில் இந்திய தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். அங்குள்ள கூடைப்பந்து உள்விளையாட்டு அரங்கத்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தொழிலாலர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இந்தச் சந்திப்பின்போது ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை.