

மணமகள் தனக்கு தேவையான மணமகனை தானே தேர்ந்தெடுக்க வசதியாக சுயம்வரம் நடப்பது உண்டு. இப்போது பசுக்களுக்கும் சிறந்த இணையைத் தேர்ந்தெடுக்க (சுயம்வரம்) வசதியாக, உள்நாட்டு காளைகளின் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில், மாநில கால்நடை வளர்ப்புக்கழகத்தின் சார்பில் மத்திய உயிரணு (விந்தணு) நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சர் லக்கன் சிங் யாதவ், இனப்பெருக்கத்துக்கு பயன்படும் காளைகள் கையேடை கடந்த வாரம்வெளியிட்டார். இதை இணையதளத்தில் பார்க்க முடியும். இதில், கிர், சாஹிவால், தர்பார்கர், முர்ரா, மாலவி மற்றும் நிமாரி உட்பட 16 உள்நாட்டு இனங்களைச் சேர்ந்த 200 காளைகள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த 200 காளைகளும் மத்திய உயிரணு நிலையத்தில் பராமரிக்கப்படும். இந்தக் கையேடு மாதந்தோறும் புதுப்பிக்கப்படும் என்றும் உள்நாட்டு இனங்கள் பெருக இது உதவும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தக் கையேட்டில் ஒவ்வொரு காளையைப் பற்றிய விவரங்களும் 3 பிரிவுகளில் இடம்பெற்றிருக்கும். முதல் பிரிவில் இனம், வயது உள்ளிட்ட பொதுவான தகவல் இடம்பெற்றிருக்கும். அடுத்ததாக, காளையின் தாய் பசுவின் பால் உற்பத்தித் திறன், பாலில் உள்ள கொழுப்பு சதவீதம் உள்ளிட்ட தகவல் இருக்கும். மூன்றாவதாக, மரபு ரீதியிலான கோளாறு, நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றிய பரிசோதனை முடிவுகள் இடம்பெற்றிருக்கும்.
பசு உரிமையாளர்கள், இந்தக்கையேடைப் பார்த்து தங்கள் பசுவுக்கு தேவையான காளைகளின் உயிரணுவை தேர்ந்தெடுக்கலாம்.
இதுகுறித்து, கால்நடை வளர்ப்புக் கழக நிர்வாக இயக்குநர் பதோரியா கூறும்போது, “பால் உற்பத்தித் துறையை அதிக லாபகரமானதாக மாற்றுவதற்கு, பசுக்களின் பால் உற்பத்தித் திறன் அதிகமாக இருக்க வேண்டும். இதற்கு இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தப்படும் காளைகளின் இனம் சிறந்ததாக இருக்க வேண்டும். இதற்கு இந்தக் கையேடு உதவும்” என்றார்.