ஜார்க்கண்ட் தோல்வியால் பாடம் கற்குமா பாஜக?

ஜார்க்கண்ட் தோல்வியால் பாடம் கற்குமா பாஜக?
Updated on
1 min read

ஜார்க்கண்டில் ஐந்து வருட ஆட்சியை முதன்முறையாக முழுமை செய்த முதல் கட்சியான பாஜகவுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் பிஹார் அரசியலில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜார்க்கண்டில் பாஜக செய்த சில தவறுகளினால் இந்த தோல்வி ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

முதலாவதாக, அந்த கட்சியின் தேசிய தலைமை ஜார்க்கண்ட் பழங்குடிகளின் மாநிலம் என்பதை உணரவில்லை. பழங்குடி மக்கள் நடத்திய போராட்டம் காரணமாகத்தான் பிஹாரில் இருந்து கடந்த 2000-ம் ஆண்டில் ஜார்க்கண்ட் பிரிந்தது. மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் பழங்குடி இனத்தைச் சாராத ரகுவர் தாஸை முதல்வராக நியமித்தது பெரும் தவறாகப் பார்க்கப்படுகிறது. இதை பிஹார் முதல்வரான நிதிஷ்குமார் அப்போதே சுட்டிக் காட்டினார்.

கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்த ரகுவர் தாஸ் இந்த முறை முதன்முறையாக தோல்வியைச் சந்தித்தார். அவரை வென்ற சுயேச்சையான சரயு ராய், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் பாஜகவில் இருந்து வெளியேறிய முக்கிய தலைவர். இது, பாஜகவின் தேசிய தலைவரான அமித்ஷாவின் முடிவுக்கு விழுந்த பலத்த அடியாகக் கருதப்படுகிறது.

பிஹாரில் முதல்வரானதும் மதுவிலக்கை தீவிரமாக அமல்படுத்தினார் நிதிஷ். அதேசமயம், நிதிஷின் செயல்பாட்டை விமர்சிக்கும் வகையில் ஜார்க்கண்டில் நிதியைப் பெருக்க மேலும் அதிக மதுக்கடைகளை திறந்தது பாஜக அரசு. இந்த நிலைப்பாடு ஜார்க்கண்ட் பெண்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவை தேர்தல் பணிகள் தொடங்கியது முதல் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு பாஜக அரசு விளம்பரங்களை அள்ளி வீசியதாக புகார் எழுந்தது. வெறும் விளம்பரங்களால் மட்டும் தேர்தலில் வெற்றி பெற்று விட முடியாது என்பதை இந்த தேர்தல் பாஜகவுக்கு உணர்த்தியுள்ளது.

வரும் 2020-ம் ஆண்டில் பிஹார் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஜார்க்கண்டில் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியால் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் மகிழ்ந்துள்ளார் எனத் தெரிகிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான நிதிஷ், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின் பிஹாரில் தனித்துப் போட்டி எனவும் அம்மாநில பாஜக தலைவர்கள் சிலர் பேசியிருந்தனர். இந்தநிலை ஏற்பட்டால் லாலுவுடனும் சேர முடியாமல் நிதிஷ் கட்சி தனித்து விடப்படும். ஜார்க்கண்டின் தோல்வியால் இவ்விரு பிரச்சினைகளும் தீரும் என எண்ணியும் நிதிஷ் குமார் மகிழ வாய்ப்புகள் உள்ளன. ஜார்க்கண்டின் தோல்வியால் பிஹார் தேர்தலில் பாஜக பாடம் கற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in