Published : 25 Dec 2019 06:46 PM
Last Updated : 25 Dec 2019 06:46 PM

ஜார்க்கண்டில் புதிய அரசு பதவியேற்பு விழா: சோனியா காந்திக்கு ஹேமந்த் சோரன் அழைப்பு

புதுடெல்லி

ஜார்க்கண்டில் புதிய அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு டெல்லியில் சோனியா காந்தியை நேரில் சந்தித்து ஹேமந்த் சோரன் அழைப்பு விடுத்தார்.

ஜார்க்கண்டில் கடந்த மாதம் 30-ம் தேதி முதல் கடந்த 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக தனித்துப் போட்டியிட்டது. மொத்தம் உள்ள 81 இடங்களில் 79-ல் போட்டியிட்டது. ஒரு தொகுதியில் சுயேச்சைக்கு ஆதரவளித்தது. மற்றொரு தொகுதியில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் கூட்டமைப்பு (ஏஜேஎஸ்யு) தலைவர் சுதேஷ் மஹதோவுக்கு எதிராக பாஜக போட்டியிடவில்லை.

முன்னாள் முதல்வர் சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (43), காங்கிரஸ் (31), லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (7) ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி தலைமையிலான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவும் (ஜேவிஎம்) ஏஜேஎஸ்யு கட்சியும் தனித்துப் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டன.

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்நிலையில், ஜேஎம்எம் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதில் ஜேஎம்எம் 30, காங்கிரஸ் 16, ஆர்ஜேடி 1 இடங்களில் வெற்றி பெற்றன.

இதையடுத்து, ஜேஎம்எம் தலைமை யில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இக்கட்சியின் செயல் தலைவரும் சிபு சோரனின் மகனுமான ஹேமந்த் சோரன் 2-வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திரௌபதி முர்முவை ஜேஎம்எம் கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் சந்தித்தார். தனக்கு 50 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து வரும் 29-ம் தேதி ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.

இந்தநிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக டெல்லியில் சோனியா காந்தியை நேரில் சந்தித்து ஹேமந்த் சோரன் அழைப்பு விடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x