

உத்தரப் பிரதேசத்தில் போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. உ.பி.யில் நடந்த போராட்டத்தின்போது பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
இந்தநிலையில் லக்னோவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளான இன்று அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:
‘‘உத்தரப் பிரதேசத்தில் போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தாங்கள் செய்தது சரியா அல்லது தவறா என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.
வன்முறையை கைவிட்டு தங்கள் வீடுகளுக்குச் சென்று தங்களுக்குள் கேள்வி கேட்க வேண்டும். தாங்கள் செய்வது சரியா தவறா என்பதை கேட்க வேண்டும். தங்கள் சேதப்படுத்திய அரசு பேருந்தகள் உள்ளிட்ட பொதுச் சொத்துக்கள் நமது எதிர்கால சந்ததியினருக்கு சொந்தமானது.
நாடுமுழுவதும் சுமூகமான சூழல் நிலவ வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். இதைத் தான் ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அதனால் சட்டம் ஒழுங்கை மதிக்க வேண்டும். அதன் மூலமே நமது பாதுகாப்பை நாம் உறுதி செய்ய முடியும்.’’ என பேசினார்