

வெங்காய விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து 10 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.
பத்தாயிரம் டன் வெங்காய இறக்குமதிக்காக சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டர்கள் வரும் 27-ம் தேதி திறக்கப்பட்டு தகுதியுள்ள டெண்டர் இறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பல்வேறு மாநிலங்களில் ஒரு கிலோ வெங்காயம் சராசரியாக கிலோ ரூ.70 முதல் ரூ.80-க்கு விற்கப்படுகிறது.
டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயம் விலை விரைவில் ரூ.100-ஐ தாண்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. விலையேற்றத்தைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இப் பிரச்சினை குறித்து மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் சிங் பாதல் கூறியபோது, உபரி விளைச்சலின்போது வெங்காயத்தை பதப்படுத்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் வெங்காயம் வீணாவதும் தடுக்கப்படும், விலையேற்றமும் கட்டுப்படுத்தப்படும் என்று யோசனை தெரிவித்துள்ளார்.