

அனைத்து தரப்பினருக்கும் சரிசம மான சுகாதார வசதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக, நாடு முழுவதும் சுகாதார வசதி குறை வாக உள்ள 184 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வும் அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
‘செயல்பாட்டுக்கான சர்வதேச அழைப்பு உச்சி மாநாடு 2015’ டெல்லியில் நேற்று நடைபெற்றது. தாய், சேய் இறப்பை தடுப்பது தொடர்பாக சர்வதேச நாடுகள் இணைந்து செயல்படுவதை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு 2 நாட்களுக்கு நடைபெறு கிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் செய்துள்ளது. 24 நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவைப் பொறுத்தவரை சுகாதார சேவையில் சமனற்ற நிலை நிலவுவது கவலை அளிக்கிறது. பல்வேறு மாநிலங்களுக்கு இடையே நிலவும் பாரபட்சமான இந்த நிலையைப் போக்கி சமமான சுகாதார சேவை கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி நாடு முழுவதும் சுகாதார வசதிகள் மிகவும் குறை வாக உள்ள 184 மாவட்டங்கள் அடை யாளம் காணப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் சுகாதார வசதியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சர்வதேச அளவில் 2015 டிசம்பருக்குள் தாய் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் டெட்ட னஸ் நோயை முற்றிலும் தடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே இந்தியா இலக்கை எட்டிவிட்டது. இந்த நோயை ஒழிக்க தேவையான தொழில்நுட்பத்தை உலக நாடுகளுக்கு வழங்க இந்தியா தயாராக உள்ளது.
சமுதாயத்தில் எதிர்பாராத சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் நிலையில், மக்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளனர். எனவே, அனைவருக்கும் சமமான சுகாதார சேவை கிடைப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இந்தியாவில் 1990-ல் 5 வயதுக் குட்பட்ட குழந்தைகள் இறப்பு 1000-க்கு 126 ஆக இருந்தது. இது 49 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சராசரி 46 ஆக உள்ளது. இப்போதுள்ள நிலை தொடர்ந்தால் இந்தியா விரைவில் மில்லினியம் வளர்ச்சி இலக்கை எட்டிவிடும்.
உலகம் முழுவதும் கடந்த 2009-ல் போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பாதிக்கும் மேற் பட்டோர் இந்தியர்கள் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது போலியோ முற்றிலும் ஒழிக்கப் பட்டுள்ளது.
தடுக்கக் கூடிய நோய்க்கான தடுப்பூசி போடாத காரணத்தால் ஒரு குழந்தைகூட இறக்கக்கூடாது என்ற நோக்கத்தில் இந்திரதனுஷ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேசிய சுகாதார திட்டம் மூலம் சுகாதார வசதிகள் மேம்படுத் தப்பட்டுள்ளன. இதுதவிர ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம் மூலம் இப்போது 75 சதவீத பிரசவம் சுகாதார மையங்களில் நடைபெறுகின்றன.
இத்தகைய திட்டங்களை சார்க் உட்பட இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள 24 நாடு களுடன் பகிர்ந்துகொள்ள இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.