

லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டிருந்த எக்ஸ் பிரிவு பாதுகாப்பைத் திரும்பப் பெற்று, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பாக உயர்த்தி மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன
முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகனும் எம்எல்ஏவுமான ஆதித்யநா தாக்கரேவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், அது இசட் பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 45 முக்கிய விஐபிக்களின் பாதுகாப்பு அனைத்தும் மறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், " சச்சின் டெண்டுல்கருக்கு எப்போதும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் எக்ஸ்பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சச்சினுக்கு பாதுகாப்பாக போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உடன் இருந்துவந்தார். அந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் சச்சினுக்கு தேவைப்பட்டால் பாதுகாப்பு வழங்கப்படும்
இதுதவிர பாஜக தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஒய் பிரிவுடன் கூடிய வாகன பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது, அது திரும்பப் பெறப்பட்டுள்ளது. உ.பி. முன்னாள் ஆளுநர் ராம்நாயக்கிற்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு எக்ஸ் பிரிவாகவும் வழக்கறிஞர் உஜ்வால் நிகமின் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு ஒய் பிரிவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அன்னா ஹசாரேவின் பாதுகாப்பு ஒய் பிரிவில் இருந்து இசட் பிரிவு பாதுகாப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பாதுகாப்பு ஆய்வு நடத்தப்படும், உளவுத்துறை அளிக்கும் தகவல்கள், மிரட்டல்கள், உள்ளூர் போலீஸ் நிலையங்கள் அளிக்கும் தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பாதுகாப்பு மாற்றி அமைக்கப்படும்" எனத் தெரிவித்தார்