

முன்னாள் பிரதமரும், மறைந்த பாஜக மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் 95-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி அவரின் நினைவிடத்துக்குச் சென்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
டெல்லியில் உள்ள சதைவ் அடல் நினைவிடத்துக்கு என்று காலை சென்ற பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, வாஜ்பாய் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
குவாலியரில் கடந்த் 1924-ம் ஆண்டு பிறந்த அடல் பிஹாரி வாஜ்பாய், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ம்தேதி உடல்நலக் குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.
பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், " நாட்டு மக்களின் இதயத்தை கவர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளில் என்னுடைய அஞ்சலியைச் செலுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டுக்கு வாஜ்பாய் செய்த பணிகள் குறித்த சிறிய வீடியோவையும் பிரதமர் மோடி அதில் இணைத்துள்ளார்.
மேலும், மதன் மோகன் மாளவியாவின் 158-வது பிறந்தநாள் விழாவுக்கும் பிரதமர் மோடி ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதில் " தாய் தேசத்துக்குத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளில் என்னுடைய பணிவார்ந்த அஞ்சலி. சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் மாளவியா முக்கியமான பங்காற்றினார் கல்வித்துறையில் மாளவியா மதிப்பிடமுடியாத பணிகளைச் செய்துள்ளார். அவரின் கல்வித்திறன், சிந்தனை அனைத்து மக்களையும் ஈர்த்திருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்