Last Updated : 01 Aug, 2015 10:32 AM

 

Published : 01 Aug 2015 10:32 AM
Last Updated : 01 Aug 2015 10:32 AM

நாடாளுமன்ற முடக்கத்துக்கு தீர்வு காண வரும் 3-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்; பிரதமருக்கு காங்கிரஸ் நிபந்தனை

அமளி, கூச்சல் குழப்பம், புறக்கணிப்பு போன்ற காரணங்களால் அலுவல்கள் நடக்காமல் நாடாளுமன்றம் முடங்குவதற்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் வரும் 3-ம் தேதி கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எட்டப்படாத நிலையில், வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது. கூட்டத்துக்கு முன்பாக, பிரதமர் சில உறுதியான தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற முடக்கத்துக்கு தீர்வு காண நேற்று முன்தினம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன். ஆனால், அந்த கூட்டம் தோல்வியில் முடிந்தது. நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவதற்கான முயற்சிகளை அரசுதான் எடுக்கவேண்டும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் எல்லா கட்சிகளும் தெரிவித்தன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி யுடன் நேற்று காலை பேச அரசு திட்டமிட்டிருந்தது, ஆனால், காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் காரணமாக இச்சந்திப்பு கைகூடவில்லை. விரைவில் காங்கிரஸ் உறுப்பினர் களுடன் பேசுவோம் என மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.

குர்தாஸ்பூரில் நடந்த தீவிரவாத தாக்குதல் பற்றி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்தபோதுகூட தேசிய பாதுகாப்பு சம்பந்தமான விவகாரம் என்பதையும் கருத்தில் கொள்ளாமல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டது வேதனையளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

லலித் மோடி விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, வியாபம் ஊழல் முறைகேட்டில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி பிரச்சினை எழுப்பி வருகிறது. ஆனால் யாரும் ராஜினாமா செய்யமாட்டார்கள் என பாஜக அறிவித்ததால் நாடாளுமன்றத்தை நடத்தவிடமாட்டோம் என காங்கிரஸ் கூறிவருகிறது.

லலித் மோடி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரை யும் ராஜினாமா செய்யவேண்டும் என்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தினார். ராஜினாமா இல்லை என்றால் விவாதம் இல்லை. இதுதான் எங்கள் நிலைப்பாடு. இதில் எங்களை சமாதானப்படுத்தப் பார்க்கிறார்கள். அதை நாங்கள் ஏற்கவில்லை. நாடாளுமன்றத்தை நடத்தும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

காங்கிரஸ் இடர்செய்வதாக பாஜக குற்றம்சாட்டுகிறது. என்ன நடந்தாலும் ராஜினாமா கோரிக்கை வைப்பது என்பது பாஜக ஏற்படுத்திய மரபு. இப்போது காங்கிரஸ் மீது குறைகூறுகிறார்கள். இது சரியல்ல என்றார் கார்கே.

ஜூலை 21-ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடரில் முக்கிய அலுவல் எதுவும் நடை பெறவில்லை. இரு அவைகளை யும் நாடாளுமன்றத்தில் முடக்கியது காங்கிரஸ். நில மசோதா, சரக்கு சேவை வரி, ரியல் எஸ்டேட் மசோதா ஆகியவை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன.

நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுத்து நாட்டின் வளர்ச்சியை முடக்குவதாக காங்கிரஸ் மீது மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியும் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் நிபந்தனை

வரும் திங்கள்கிழமை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், பிரதமர் தனது மவுனத்தைக் கலைக்க வேண்டும் என காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது:

நாங்கள், நொறுக்குத் தீனி தின்பதற்காகவும், தேநீர் குடிப்பதற் காக மட்டும் அக்கூட்டத்தில் பங்கேற்க விரும்பவில்லை. எங்களின் கோரிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை பிரதமர் முதலில் தெரிவிக்க வேண்டும். மோடியின் அகந்தை மற்றும் பிடிவாதம் காரணமாகவே நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இவ்வார இறுதியில் அரசுக்கு ஞானோதயம் பிறக்கும் என நம்புகிறோம். அவ்வாறு நடந்தால், நாடாளுமன்றம் சுமுகமாக நடை பெறும். என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x