

சென்சஸ் என்று சொல்லப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், என்பிஆர் எனச் சொல்லப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் பல்வேறு வேறுபாடுகள் இருக்கின்றன.
2020-ம் ஆண்டில் மத்திய அரசு இரு முக்கியப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. அவை சென்சஸ் என்று சொல்லப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பும், என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் பதிவேடு பணிகளுமாகும். இந்த இரு பணிகளும் நாடு முழுவதும் வீடு வீடாக நடத்தப்பட உள்ளது.
இந்த இரு விஷயங்களுக்கு இடையே பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இரு முறைகளும் ஒன்றுதான், என்ஆர்சியோடு தொடர்புடையது என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது. ஆனால், உண்மையில் என்பிஆர், சென்சஸ் இரு பணிகளும் வெவ்வேறானவை. அவற்றின் நோக்கங்களும் முற்றிலும் மாறுபட்டவை
முதலில் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) என்றால் என்ன?
என்பிஆர் என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு. குடியுரிமைச் சட்டம் 1955-ன் மற்றும் குடியுரிமை விதிகள் 2003-ன் கீழும் கிராமம், துணை நகரம், துணை மாவட்டம், மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் மக்கள் தொகை பதிவேடு குறித்துக் கணக்கெடுப்பும், அடையாள அட்டையும் வழங்கும் பணிகள் நடைபெறும்.
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தங்கள் பெயரைப் பதிவு செய்வது கட்டாயமாகும். நாட்டின் எந்தப் பகுதியிலும், யார் குறைந்தபட்சம் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வசித்தாலும் அவர்கள் என்பிஆர் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புள்ளிவிவரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் பயோமெட்ரிக் தகவலும் இடம் பெறும்.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி, நாடு முழுவதும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்படும். அசாம் மாநிலத்தில் என்ஆர்சி செயல்படுத்தப்பட்டதால் அங்கு நடைபெறாது.
தேசிய மக்கள் தொகை பதிவேடு கடந்த 2010-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் தொடங்கப்பட்டது. அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளும் நடந்தன. அதன்பின் 2015-ம் ஆண்டு இதில் உள்ள தகவல்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இப்போது இந்தப் பணிகள் மீண்டும் நடக்க உள்ளன.
என்பிஆர் நோக்கம் என்ன ?
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு இயல்பான குடிமகனின் முழுமையான அடையாள அட்டையை உருவாக்குவதே தேசிய குடிமக்கள் பதிவேடாகும். இந்தப் பணிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர், மற்றும் தலைமைப் பதிவாளர் தலைமையின் கீழ் நடைபெறும்.
இந்தப் பதிவேட்டில் தனிமனிதர் ஒருவரின் வழக்கமான வசிப்பிடம், பெயர், குடும்பத் தலைவர், தந்தை பெயர், தாய் பெயர், திருமணமாகி இருந்தால் மனைவி பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், தேசியம், தற்போது வசிக்கும் இடத்தின் முகவரி, தற்போது வசிப்பிடத்தின் காலம், நிரந்தர முகவரி, தொழில், கல்வித் தகுதி ஆகிய விவரங்கள் கேட்கப்படும். இதற்கான அரசாணை கடந்த ஆகஸ்ட் மாதமே பிறப்பிக்கப்பட்டுவிட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) என்றால் என்ன?
1948-ம் ஆண்டு சென்சஸ் சட்டம் கொண்டுவரப்பட்டதில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சென்சஸ் எனப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பில் பல்வேறு வகையான புள்ளிவிவரங்கள் கேட்கப்பட்டு பொருளாதார விவகாரங்களுக்காகவும், அரசின் சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்தவும் பயன்படுத்தப்படும்.
கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் 2021-ம் ஆண்டில் நடத்துவதை இரு பிரிவுகளாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. வீடுகளைப் பட்டியலிடும் ஹவுஸ் சென்சஸ் எனப்படுவது 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நடக்கும்.
2-வது கட்டமாக மக்கள் தொகையைக் கணக்கிடும் பணி 2021 பிப்ரவரி 9-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை நடக்கும். மார்ச் 1-ம் தேதிக்கு முன்பாக முடிக்கப்படும்.
இதில் கடும் குளிர் மிகுந்த ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு 2020, அக்டோபர் 1-ம் தேதி முதல் கணக்கெடுப்பு நடக்கும்.
நோக்கம் என்ன?
சென்சஸ் எடுக்கப்படும் நோக்கம் நாட்டின் வளர்ச்சி எவ்வாறு கடந்த 10 ஆண்டுகளில் இருந்தது என்பதை அறிவதற்காக எடுக்கப்படுவதாகும். பொருளாதார ரீதியாகவும், மக்கள் தொகை ரீதியாகவும் நாட்டின் வளர்ச்சி குறித்து அறியவும், மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் எவ்வாறு சென்று சேர்ந்துள்ளன, பயனீட்டாளர்கள் யார் என்பதை அறியவும், எதிர்காலத் திட்டமிடலுக்கும் பயன்படும்.
சென்சஸில் மக்களின் பிறப்பு, இறப்பு குறித்த உறுதியான தகவல், பொருளாதார நடவடிக்கை, கல்வியறிவு, கல்வியின் நிலை, சொந்த வீடு, வீட்டில் உள்ள வசதிகள், நகரமயமாக்கல், குழந்தை இறப்பு, பிறப்பு, எஸ்சி, எஸ்டி கணக்கெடுப்பு, மொழி, மதங்கள், மக்கள் இடப்பெயர்வு, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம் பெறும்.
மேலும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அவர்களின் பாலினம், தொழில் வகை, பகுப்பு, சிறு, குறுந்தொழில், வர்த்தகம், வியாபாரம், தொழில், சேவை, அதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், பாலினம் ஆகியவை இடம் பெறும்
மக்களின் பாலினம், கல்வித்தகுதி, நகரங்கள் உருவாக்கம், குடிசைப் பகுதிகள், அங்குள்ள மக்கள் தொகை, குடிநர் வசதி, மின்சாரம், நீர்ப்பாசன வசதி, விவசாயம் செய்யும் முறை, வீடு இருந்தால் அது கான்கிரீட் வீடா அல்லது எப்படிப்பட்ட வீடு உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும்.
கடந்த 1872-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் முதல் முறையாக சென்சஸ் ஒருங்கிணைக்கப்படாத வகையில் நடத்தப்பட்டது. அதன்பின், 1948-ம் ஆண்டு சென்சஸ் சட்டம் கொண்டுவரப்பட்டதில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சென்சஸ் எனப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.