

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தவறான தகவல்களைப் பரப்பும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் மனு இதுவாகும்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தச் சட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து முஸ்லிம் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், பார்ஸிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு மட்டும் குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் இந்த 6 மதத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தாலும் குடியுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், மக்களோடு இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால் இந்தச் சட்டம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்று பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி 60-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே நீதிபதிகள் பி.ஆர்.காவே, சூர்யகாந்த் ஆகியோர் கொண்ட அமர்வு சட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது எனக் கூறி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். இவ்வழக்கு 2020, ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே மும்பையைச் சேர்ந்த புனீத் கவுர் தண்டா என்பவர் சார்பில் வழக்கறிஞர் வினீத் தண்டா உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், " மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்தின்படி செல்லுபடியானதாகும். இந்தச் சட்டத்தை அனைத்து மாநிலங்களும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். சில அரசியல் கட்சிகள் இந்தச் சட்டம் குறித்து தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்புகிறார்கள், வன்முறையைத் தூண்டுகிறார்கள். அந்தக் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் எந்த குடிமக்களுக்கும் எதிரானது அல்ல, அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது அல்ல என்று மத்திய அரசும், மாநில அரசுகளும் விளம்பரம் செய்ய உத்தரவிட வேண்டும்.
மேலும், தவறான தகவல்களைப் பரப்பும் ஊடகங்கள், நாளேடுகள் ஆகியவற்றுக்கு எதிராக மத்திய அரசு சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இந்தச் சட்டம் குறித்துப் பரப்பிவிடப்படும் தவறான தகவல்களால் உருவாகும் வன்முறையால் பொதுச் சொத்துகளுக்கு ஏராளமான சேதம் ஏற்படுகிறது. குறிப்பாக டெல்லி, அகமதாபாத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத், அசாம் ஆகிய மாநிலங்களில் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது. இதைத் தவிர்க்கும் வகையில்தான் பொதுநலன் நோக்கில் இந்த மனுத்தாக்கல் செய்யப்படுகிறது" என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.