தேசிய மக்கள் தொகை பதிவேட்டைப் புதுப்பிக்க ரூ.8,500 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா : கோப்புப்படம்
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா : கோப்புப்படம்
Updated on
1 min read

தேசிய மக்கள் தொகை பதிவேட்டைப் புதுப்பிக்க 8 ஆயிரத்து 500 ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மக்கள் தொகை பதிவேடு குறித்துக் கணக்கெடுக்கும் பணிகள் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி, நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் கணக்கெடுப்பு 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-தேதி வரை நடத்தப்படும். இதன் மூலம் ஒரு தகவல் களஞ்சியத்தை உருவாக்கி நாட்டில் வசிக்கும் மக்கள் குறித்த முழுமையான அளவைத் தெரிந்துகொள்ள முடியும்.

நாட்டில் எந்தப் பகுதியிலும், யார் குறைந்தபட்சம் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வசித்தாலும் அவர்கள் என்பிஆர் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புள்ளிவிவரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் பயோமெட்ரிக் தகவலும் இடம் பெறும்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு கடந்த 2010-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் தொடங்கப்பட்டது. அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளும் நடந்தன. அதன்பின் 2015-ம் ஆண்டு இதில் உள்ள தகவல்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

இப்போது சேகரிக்கப்பட்ட அனைத்துத் தகவல்களும், விவரங்களும் 2021-ம் ஆண்டு மக்கள் தொகை பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படும். இந்தப் பணிகள் அசாம் மாநிலம் தவிர்த்து, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வரும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். இந்தத் தகவலை மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் பதிவாளர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது

கிராமம், துணை நகரம், துணை மாவட்டம், மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் மக்கள் தொகை பதிவேடு குறித்துக் கணக்கெடுப்பு குடியுரிமைச் சட்டம் 1955-ன் மற்றும் குடியுரிமை விதிகள் 2003-ன் கீழும் நடைபெறும்.

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தங்கள் பெயரைப் பதிவு செய்வது கட்டாயமாகும். இந்தத் தகவல் களஞ்சியத்தின் நோக்கம் நாட்டில் எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்பது குறித்து முழுமையான தகவல் திரட்டுவதற்காகத்தான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in