

விவசாயிகளுக்கு ஓய்வுபெறும் வயது உண்டா? ஓய்வுகால பயன்கள் இவர்களுக்கு உண்டா? அவர்களுக்கான விடுப்பு காலம் எது? மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் இந்தக் கேள்விகளுக்கு விடை காண முயற்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தின் 79 வயது விவசாயி கஜானன் காளி விவசாயத்திலிருந்து ஓய்வு பெற்றதை ஒரு விழாவாகக் கொண்டாடினார்.
காளி சுமார் 60 ஆண்டுகளாக நிலத்தில் பாடுபட்டுள்ளார். அனைத்து விவசாயிகளையும் போல் கடைசி மூச்சு வரை நிலத்தில் உழைக்க வேண்டியதுதான் நம் நிலை என்று இவரும் நினைத்திருந்தார். ஆனால் காளியின் வாரிசுகளும் அவரது குடும்பத்தினரும் ‘போதும், ஓய்வு காலத்தை மகிழ்ச்சியுடன் கழியுங்கள், இனி நீங்கல் வயலில் இறங்க வேண்டாம்’ என்று அவருக்கு நிறைவுடன் ஓய்வு அளித்தனர்.
அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் தான் உழைத்த வயல்வெளியைச் சுற்றி வந்து தன் ஓய்வை சடங்கார்த்தமாக அறிவித்தார் காளி.
இவரை உள்ளூர் சேனல் ஒன்று பேட்டி கண்ட போது, ஓய்வு பெறுவது வலி நிரம்பியது, ஆனால் குழந்தைகளிடம் விவசாயத்தை ஒப்படைத்து விட்டேன் , விவசாயிகளுக்கு மூலதனமே உழைப்புதான், என்றார். அவரது குடும்பத்தினரும் 60 ஆண்டுகள் வயலில் உழைத்தவருக்கு ஏன் ஓய்வு கொடுக்கக் கூடாது? என்றனர். ஆனால் இவருக்கு பென்ஷனோ, வருங்கால வைப்பு நிதியோ இல்லாததால் இவர் தன் இறுதிக்காலத்தை வாரிசுகளை நம்பி கழிக்க வேண்டியதுதான்.
மத்திய அரசின் திட்டம்:
மத்திய அரசு பிரதமர் கிசான் மான் -தான் யோஜனா திட்டத்தை அறிவித்தது என்னவோ உண்மைதான். இதன்படி தகுதியுடைய விவசாயிகளுக்கு 60 வயது ஆனவுடன் மாதம் ரூ.3000 பென்ஷன் கிடைக்க திட்டம் கொண்டு வந்தது. விவசாயிகள் பங்களிப்பு செய்யும் இந்தக் ஓய்வூதிய திட்டத்தில் இணைய 18 வயது முதல் 40 வயது வரை காலம் உண்டு. அதாவது பென்ஷன் நிதியில் விவசாயி ரூ.55 முதல் ரூ.200 வரை செலுத்தலாம்.
இந்தத் திட்டம் குறித்து மகாராஷ்டிராவைச் சேர்ந்த இன்னொரு விவசாயி கண்பத் சவாந்த் என்பவர் கூறும்போது, “விளிம்பு நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கே அல்லல் பட்டு வருகின்றனர். இவர்களால் எங்கிருந்து பென்ஷனுக்காக பணம் கட்ட முடியும்? இளம் விவசாயிகள் ஓய்வு பெறும் வயது வரை காத்திருப்பதில்லை, இவர்கள் விவசாயத்தை விட்டே விலகி விடுகின்றனர்” என்றார்.
2001 முதல் 2011 வரை 90 லட்சம் விவசாயிகள் விவசாயத் தொழிலைத் துறந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் இன்னும் கடுமையாக அதிகரிக்கும் என்று வேளான் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 2022 -ம் ஆண்டு வாக்கில் விவசாயிகள் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் இதுவும் கூட தாங்கள் இழந்த சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தை மீட்டெடுக்க உதவாது என்றே விவசாயிகள் நம்புகின்றனர்.
சுயசார்புதான் இதற்கெல்லாம் வழி என்கிறார் அகமெட் நகர் மாவட்ட ஹிவாரி பஜார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர். இங்கு விவசாயிகள் ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமித்து விவசாயத்தை லாபம் தரும் தொழிலாக மாற்றி வருகின்றனர்.
இந்தக் கிராமத்தில் அடிப்படை வருவாய் 1991-ல் ரூ.832 ஆக இருந்தது தற்போது ரூ.32,000 ஆக அதிகரித்துள்ளது. ஆகவே இவர்கள் விரும்பினால் விடுப்பும் எடுத்துக் கொள்ளலாம் ஓய்வும் பெறலாம். இவர்கள் பால் உற்பத்தித் தொழிலில் இறங்கி தினசரி 4000 லிட்டர் பால் உற்பத்தி செய்கின்றனர். இந்தக் கிராமத்தில் எந்த குடும்பமும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இல்லை.
ஆகவே ஹிவாரி பஜார் கிராம விவசாயிகள் ஓய்வும் பெறலாம், ஓய்வு வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் கழிக்க முடியும்.
ஆசிரியர்: ராதேஷியாம் ஜாதவ்
மூலம்: தி இந்து பிசினஸ்லைன்
தமிழில்: இரா.முத்துக்குமார்