

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அதிக இடங்களில் வென்றுள்ளபோதிலும் முந்தைய தேர்தலை ஒப்பிட்டால் அதன் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம் பாஜகவிற்கு தொகுதிகள் குறைந்துள்ள நிலையில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டன.
இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக தனியாகவும், காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. 81 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை. இதில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனாதா தளம் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்றன.
பாஜக 25 இடங்களிலும், ஜேவிஎம் கட்சி 3 இடங்களிலும், ஏஜேஎஸ்யு கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 இடங்களிலும், .காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் 1 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களில் வென்றுள்ளபோதிலும் முந்தைய சட்டப்பேரவைத் தேர்தலை ஒப்பிட்டால் அதன் வாக்கு சதவீதமாக 18.72 குறைந்துள்ளது. 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 20.43 சதவீத வாக்குகளை பெற்று 19 இடங்களில் மட்டுஏம வெற்றி பெற்றது.
அதேசமயம் பாஜக கடந்த முறை 37 இடங்ளகில் வெற்றி பெற்ற நிலையில் 31.76 சதவீத வாக்குகள் பெற்றது. இந்த தேர்தலில் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள போதிலும் அக்கட்சி 33.37 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதமும், பெற்ற இடங்களும் அதிகரித்துள்ளன. 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 10.46 சதவீத வாக்குகளுடன் 9 இடங்களில் காங்கிரஸ் வென்றது. இந்தமுறை 13.88 சதவீத வாக்குகளுடன் 16 இடங்களில் வென்றுள்ளது.